full screen background image

ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை ரஞ்சனா நாச்சியார்

ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை ரஞ்சனா நாச்சியார்

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜாவான பாஸ்கர சேதுபதியின் பேத்தியான, இவர் இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார்.

பொறியியலில் எம்.எஸ்.சி., எம்.டெக்., மற்றும் எல்.எல்.பி.(ஹானர்ஸ்) என மிகப் பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் நுழைந்தவர்தான் ரஞ்சனா நாச்சியார்.

‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு நல்ல கதையும்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரஜினிகாந்துடன் நடித்த ‘அண்ணாத்த’ மற்றும் அருள்நிதி நடித்த ‘டைரி’ ஆகிய படங்கள் இவரை இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. இந்த நிலையில் நடிப்பை தொடர்ந்து அடுத்ததாக தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.

தற்போது ஸ்டார் குரு ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள ரஞ்சனா நாச்சியார், ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவையும் எடுத்து தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இதில் ஒரு படத்தை ‘குட்டிப் புலி’ புகழ் நகைச்சுவை நடிகரும் ‘பில்லா பாண்டி’, ‘குலசாமி’,  ‘கிளாஸ்மேட்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநருமான சரவண சக்தி இயக்குகிறார்.

இன்னொரு படத்தை விஜய் டிவி புகழ் நடிகரான அறிமுக இயக்குநர் சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுமே கிராமத்து கதைக் களத்தில் உருவாக இருக்கின்றன.

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது, “மிகப் பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தபோதும்கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால், ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன்.

அதன் முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அது பற்றிய நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர்தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள், ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான், ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..” என்று கூறினார்.

Our Score