கொரோனாவைக் கண்டு உலகமே பயந்து போய் அதனைத் திட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகை மாளவிகா மோகனன் மட்டும் மனதுக்குள் அந்தக் கொரோனாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் 43-வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இது எப்படி நடந்தது என்பது பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்தான், இது கொரோனாவால் நடந்த உதவி என்பது தெரிய வந்துள்ளது.
இது பற்றி நடிகை மாளவிகா மோகனன் பேசும்போது, “கொரோனா லாக் டவுன் காலத்திற்கு முன்பேயே இந்தப் படத்தில் நடிக்க என்னிடம் தேதி கேட்டார்கள். அப்போது நான் 2 தெலுங்குப் படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டிருந்ததால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அதனால் மன வருத்தத்தோடு இருந்தேன்.
ஆனால், திடீரென்று ஏற்பட்ட கொரோனா லாக் டவுனால் அனைத்தும் மூடப்பட்டதால் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தேதிகள்கூட மாதக் கணக்கில் தள்ளிப் போனது.
இதற்குப் பிறகு அவர்கள் மீண்டும் என்னிடம் தேதிகள் கேட்டபோது என்னிடம் இருந்தது. நான் நடிப்பதாக இருந்த படங்கள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போனதால் அதிர்ஷ்டவசமாக கொரோனா புண்ணியத்தால், தனுஷுடன் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன்.. வரும் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
மாளவிகா மோகனன் ஏற்கெனவே தமிழில் ‘பேட்டை’ படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். இதற்கடுத்து தனுஷுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்த எடுப்பிலேயே ரஜினி, விஜய், தனுஷ் என்று பெரிய நடிகர்களுடன் சுற்றி வருவதால் மாளவிகா மோகனின் மார்க்கெட் ரேட்டும் ஏறித்தான் இருக்கிறது.