அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் போலீஸ் துணை கமிஷனராக நடித்திருந்த தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமாரின் மன அழுத்தம் நோயுடனான மனைவியாக நடித்தவர் நடிகை லிஸி ஆண்டனி.
படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை. அவமதிப்பு, கண்டு கொள்ளாமை, வெறுமை, சந்தேகப் பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும்.
அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது. ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர்தான் நடிகை லிஸி ஆண்டனி.
படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிராக இருக்கிறார். ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு, ஸ்டெல்லா மேரீஸில் பி.காம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர். படிப்பில் படு சுட்டி. சுயம் தேடும் சுதந்திரப் பறவை.
ஷாப்பிங் போவதுதான் பெண்கள் உலகம் என்று கருதப்படும் நிலையிலிருந்து ஷிப்பிங் துறை என்று ஈடுபட்டு உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தவர். தன்னம்பிக்கையான மனுஷி.
அவருடன் பேசியபோது, “எங்களுக்குப் பூர்வீகம் கேரளா. என்றாலும் நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னையின் வண்ணாரப்பேட்டை. எங்கள் குடும்பம் ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பம். சினிமா பார்க்க அனுமதி இல்லை. வீட்டில் டிவியில்கூட செய்திகள் மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு கட்டுப்பாடு உண்டு.
அப்பா விமானப் படையில் இருந்தார். பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும், கடலில் கப்பலில் பயணம் செய்யவும் ஆசை. என் கனவு கப்பல் மாலுமி ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் என் அம்மா விடவில்லை.
ஷிப்பிங்கில் ஈடுபடும்வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும், நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன். ஆரம்பத்தில் வளைகுடா நாடுகள் போன நான், பிறகு யாரும் அதிகம் போகாத ஆப்பிரிக்க நாடுகளுக்கெல்லாம் போனேன். எத்தியோப்பியாவிற்குக்கூட சென்றிருக்கிறேன்.
எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம். கிளாசிக்கல் கற்றிருக்கிறேன். இந்தியா வந்தபோது எனக்கு நட்பான இயக்குநர் ராம் சார், முதலில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்கத்தான் என்னை அழைத்தார். நட்பின் பேரில்தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அது பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது. என்னை எல்லாரும் ‘ஸ்டெல்லா மிஸ்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். ராம் சார் இப்போதும் என்னை அப்படித்தான் அழைப்பார்.
இப்படியான நட்பில் பிறகு சிறு, சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது ‘தரமணி’யில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
எனக்கு ராம் சார் மீது நம்பிக்கை உண்டு. அவரது படைப்புத் திறமை மீது பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் ‘தரமணி’ படத்தில் நடிக்க அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன். காரணம் அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் பேச வைத்து விடுவார்.
படத்தில் ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாக காட்டியுள்ளார். என் பாத்திரமும் அப்படித்தான். இதற்கு ஏழு நாட்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு சுமுகமாகவே நடந்தது.
ராம் சார் இயல்பாக நடிக்க வைப்பார். அழுகிற காட்சிகளில்கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபம் எதுவுமே இல்லையா என்பார். இப்படித்தான் எங்களிடம் நடிப்பை வாங்கினார். நானும் கிளிசரின் போடாமல்தான் அழுதேன்.
அவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. இப்படி ‘தரமணி’ மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இரண்டு பெரிய படங்களுடன் ‘தரமணி’ வெளியாகி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி.
முகம் தெரியாதவர்களிடமிருந்து என் நடிப்பை ‘சூப்பர்! சூப்பர்!!’ என்று பாராட்டி பேஸ்புக் மெசஞ்சர்ஸ் என்று இன்பாக்ஸில் பாராட்டுகள் குவிந்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது…” என்கிறார்.
“தரமணி’ படம் பற்றி பல்வேறு கருத்துகள் அலையடிக்கின்றன. ஒரு பெண்ணாக லிஸி என்ன நினைக்கிறார்..?” என்றபோது, “படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார்.
இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும். ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம், ஒரு பெண் தவறிழைத்தால் ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகள்தானே…? யாரோ ஒருவரின் அக்காதானே..? என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது. பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழி மொழிகிறேன்…” என்கிறார்.
லிஸி ஆண்டனிக்கு பிடித்த நடிகை முன்னோடி யார் என்று கேட்டால், “உண்மையைச் சொன்னால் அப்படி யாருமில்லை. தோன்றவில்லை. நான் நானாக மட்டுமே இருக்க ஆசை. யாரையும் பின்பற்ற ஆசையில்லை. நடிக்கும் பாத்திரத்தின் நீளம் அளவு பற்றி எனக்குக் கவலையில்லை. பாசிடிவ் நெகடிவ் பற்றிப் பயமில்லை. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிய வேண்டும்…” என்று தன் படங்களின் தேர்வு குறித்த கொள்கையைக் கூறுகிறார்.
ராமின் அடுத்த படமான ‘பேரன்பு’, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லிஸி, இப்போது ரொம்பவும் பிஸி.