இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல’ திரைப்படம்

இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல’ திரைப்படம்

தமிழ்த் திரைப்படவுலகில் புதிதாக இரட்டை இயக்குநர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள் ஏ.ஜீவரத்தினம், சி.வேணு.

கிருஷ்ணன்-பஞ்சு, தேவராஜ்-மோகன், பாரதி-வாசு, ராபர்ட்-ராஜசேகர் வரிசையில் இடம் பிடிப்பதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படம் 'ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல'.

இந்தப் படத்தை வேணு ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சி.வேணு, ஆனந்தி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வேல்சிவா என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரண்யா ஆனந்த் நாயகியாக அறிமுகமாகிறார். வடிவுக்கரசி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடிக்கிறார்கள்.

திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்கள் இரட்டையர்களான ஏ.ஜீவரத்தினமும், சி.வேணுவும்.

இந்தப் படம் பற்றி இயக்குநர்கள் பேசுகையில், "ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கும், கிராம மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் பாடுபடும் கிராமத்து தலைவர்தான் படத்தின் நாயகன். அவனைக் காதலித்து மணக்கிறாள் நாயகி.

கிராமத்துத் துணைத் தலைவராக இருக்கும் வில்லன், நாயகன் மீது அநியாயப் பழியைச் சுமத்தி தலைவர் பதவியில் இருந்து விரட்டுகிறான்.

இந்த நிலையில் ஊரில் தொடர்ந்து மர்மமான பல செயல்கள் நடைபெறுகின்றன. அதையெல்லாம் செய்வது யார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்…" என்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.