இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகையான ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ‘ஐயர்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாகவும், தன்னை இனிமேல் ‘ஜனனி’ என்று மட்டுமே அழைக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழில் ‘திரு திரு துரு துரு’ மற்றும் ‘விண்னைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி ஐயர்.
இதைத் தொடர்ந்து ‘பாகன்’, ‘தெகிடி’, ‘அதே கண்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார் இவர். மேலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் நடித்துள்ள ‘வேழம்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஜனனி பேசும்போது, “அனைவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். என்னுடைய பெயர் ஜனனிதான். இனிமேல் இந்தப் பெயரிலேயே நீங்கள் என்னைக் குறிப்பிட வேண்டும். அழைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்..” என்று கேட்டுக் கொண்டார்.
முன்பு ‘ஜனனி ஐயர்’ என்று இவரைக் குறிப்பிட்ட சமூகத்தின் பெயருடன் சேர்த்து அழைத்து வருவது பத்திரிகைகளில் சர்ச்சையானதையடுத்து தன் பெயருடன் இருந்த ‘ஐயர்’ என்பதை ஜனனி நீக்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.









