R Productiions மற்றும் AVP Cinemas ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘நோக்க நோக்க’.
திகில், மர்மம் கலந்த இந்தப் படத்தில் நாயகனாக அர்ஜூன் சுந்தரம் அறிமுகமாகிறார். மேலும் கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், மணிமேகலை, சுரேஷ் அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை – பத்மினி, வசனம் – சிவசு, ஒளிப்பதிவு – விஜய் முத்துசாமி, இசை – ஆல்டிரின், படத் தொகுப்பு – அரவிந்த், திரைக்கதை, இயக்கம் – ஆர்.முத்துக்குமார், இணை தயாரிப்பு – வெங்கட்ராமன்.
இந்தப் படத்தின் இயக்குநரான ஆர்.முத்துக்குமார் ஏற்கெனவே தமிழில் ‘தொடக்கம்’, ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’, தெலுங்கில் ‘ராமுடு’, கன்னடத்தில் ‘பிரண்ட்லி பேபி’, ‘சாக்லேட் பாய்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் நேர்மையான நிருபரான பிரதிமா இந்தியாவில் பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த நேரத்தில் நடந்த சட்ட விரோத பண மாற்றுதலை ஆவணமாக்குகிறார்.
அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பேயே சில சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்படுகிறார். உடன் அவளது ஒரே மகளையும் கொலை செய்து விடுகின்றனர்.
நாயகியின் பெண் குழந்தை எப்படி அந்தக் கயவர்களை பேயாக உருமாறி பழி வாங்குகிறாள்… கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
மேலும் இன்றைய இணையவுலகத்தில் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தைத் தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் தண்டிப்பது போலவும் திரைக்கதையை அமைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் நாயகனும், நாயகியும் எதிர் மறை கதாபாத்திரங்களாகவே நடித்துள்ளனர் என்பது சிறப்பம்சமாகும்.
இந்த ‘நோக்க நோக்க’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.