சென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ‘சதுரங்க வேட்டை‘ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இஷாரா நாயர். இப்போது கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள் என பிசியாய் சிறகடிக்கிறார் இஷாரா நாயர்.
தன்னுடைய இன்றைய பரபரப்பு வாழ்க்கையைப் பற்றி கூறும் இஷாரா, “கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து நடிப்பின் மேல் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தது. மாடலிங்கும் செய்து வந்தேன்.
‘வெண்மேகம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அதே நேரத்தில்தான் என்னைத் தேடி வந்தது. வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அடுத்து நடித்த ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நல்ல நடிப்பதற்கு ஏற்ற கதாபாத்திரம்.
ஆரம்பத்தில் எனக்கு அழுது நடிப்பதென்றால் முகம் அசிங்கமாக பயமாக இருக்கும். அந்த கதாபாத்திரம் அழுகிறது.. அது அந்த கதாபாத்திரத்தின் முகம் என்று இப்போது நன்கு புரிந்து கொண்டேன்.
‘சதுரங்க வேட்டை’, ‘பப்பாளி’ படங்களுக்கு பிறகு, ‘பப்பரபாம்’, ‘அதிமேதாவிகள்’, ‘செல்ஃபி’ என இப்போது வரிசையாக பல படங்களில் நடித்த வண்ணம் உள்ளேன்.
‘பப்பரபாம்’ படம் 1980-களில் நடக்கின்ற கதை. ஆகவே அந்தக் காலத்து கெட்-அப்பில் வருகிறேன். அதுவும் ஒரு நல்ல கதாபாத்திரம். ‘அதிமேதாவிகள்’ படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம். ’செல்ஃபி’ ஒரு த்ரில்லர் திரைப்படம்.
ஒரு திரைப்படம் விட்டு மறு திரைப்படம் என நடித்துகொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வந்து செல்கின்றன. நல்ல பெயர் வாங்கக் கூடிய வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும். ரசிகர்கள் மனதில் ஒரு சிறிய இடமாவது பிடித்திட வேண்டும் என்பதுதான் எனது ஆசை..” என்று தன்னுடைய இளமை மாறாத புன்னகை முகத்தில் ஒளி வீசக் கூறுகிறார் இஷாரா.