full screen background image

வாகன வரி மோசடி – நடிகை அமலா பால் புத்திசாலி்த்தனமாக திசை திருப்புகிறார்

வாகன வரி மோசடி – நடிகை அமலா பால் புத்திசாலி்த்தனமாக திசை திருப்புகிறார்

நடிகை அமலா பால் மெர்சிடிஸ் ரக காரை சென்னையில் வாங்கி அதனை புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது ஒருவகையான புதுமையான ஊழல்தான்.. ஏமாற்று வழிதான். 

புதுவையில் ஒரு புதிய காரை பதிவு செய்ய 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காராக இருந்தால் வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வரியாக கட்டினாலே போதும். ஆனால் கேரளாவில் அந்தக் காரின் விலையில் 20 சதவிகிதம் கட்ட வேண்டும்.

இதனால் நடிகை அமலா பால் தான் சென்னையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய மெர்சிடிஸ் ரக காரை புதுச்சேரியில் தான் வசிப்பதாகச் சொல்லி ஒரு பொய்யான வீட்டு முகவரியைக் காண்பித்து அந்தக் காரை பதிவு செய்திருக்கிறார். இதற்காக அந்தக் காருக்கு 1 லட்சத்து 50,000 மட்டுமே வரியாகக் கட்டியிருக்கிறாராம்.

இதுவே கேரளாவில் பதிவு செய்திருந்தால் 20 லட்சம் ரூபாயை கட்ட வேண்டியிருந்திருக்கும். இதைத் தவிர்க்கும் பொருட்டே அமலாபால் இந்த முறைகேட்டை செய்திருப்பதாகத் தெரிகிறது.

இப்போது இது பற்றி மீடியாக்களில் செய்தி பரவலாக வெளியான பின்பு மூன்று நாட்களாக அமைதியாக இருந்தவர், இன்றைக்கு இது தொடர்பாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இது :

மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு,

தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு  பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறி வைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும், ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய் நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயப்படுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். 

ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும்  அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும்  இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ…? கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்தபோது, அங்கும் இந்திய ரூபாய்தான்  பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுகளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும்.

இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும்கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன் வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும்  பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.

குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட – திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும். 

உங்கள்,

அமலா பால்

அமலா பாலின் வாகன வரி மோசடி பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து கேரளாவின் முன்னணி பத்திரிகையான ‘மலையாள மனோரமா’ நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

இதனை படித்துக் கொதித்துப் போன அமலாபால் இன்றைக்கு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். முறைகேடு பற்றி நேரடியாக பதில் சொல்லாமல் மறைமுகமாய் இந்த விஷயத்தில் தன்னைக் கண்டித்த அனைவரையுமே வன்மையாக தாக்கியுள்ளார். கிண்டலடித்துள்ளார்.

சத்தியமாக இப்படியொரு புத்திசாலித்தனமான அறிக்கையை 26 வயதே நிரம்பிய நடிகை அமலா பாலிடமிருந்து யாருமே எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். பிரில்லியண்ட் சமாளிப்பு. அரசியல்வியாதிகளெல்லாம் அமலா பாலிடம் பிச்சையெடுக்கணும்.. பின்னியிருக்கார்.

அதே நேரம் தான் செய்த திருட்டுத்தனத்தையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கும் அமலா பால், “குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட – திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து…” என்று தன்னைக் குறிப்பிட்டும், தான் செய்த திருட்டுத்தனத்தைக் குறிப்பிட்டும் தப்பிக்கப் பார்க்கிறார்.

இப்படி தான் செய்த இந்த பெரிய திருட்டுத்தனத்தை ‘சின்னச் சின்ன ஆதாயத்திற்காக செய்தது..’ என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்.

இந்தச் ‘சின்னச் சின்ன ஆதாயமே’ கேரள மாநில அரசின் சட்டத் திட்டத்தின்படி மிகப் பெரிய தவறு என்பதும், அந்தக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அமலா பால் 8 வருடங்கள் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதும் அவருக்கு தெரியவில்லை போலும்.

தான் வசிக்காத ஊரில், தனக்கு வாக்காளர் அடையாள அட்டையே இல்லாத ஒரு மாநிலத்தில்.. பொய்யான பெயரில், போலியாக ஒரு முகவரியைக் கொடுத்து தான் அங்கே வசிப்பதாகச் சொல்லிவிட்டு குறைவான வரியைக் கட்டி தப்பித்திருக்கும் அமலாபாலுக்கு இது தவறாகவே, சட்ட மீறலாகவே தெரியவில்லையாம்.

உண்மையாக அமலா பாலின் சொல்படியே பார்த்தால் அவர் இப்போது பாண்டிச்சேரியில்தான் வசிக்க வேண்டும். அந்த ஊரில்தான் அந்தக் காரை ஓட்ட வேண்டும். அங்கே வசிக்கவும், அங்கே பதிவு செய்த காரை அங்கேயே ஓட்டவும் வக்கில்லாதவர் எதற்காக கேரளாவில் போய் அந்தக் காரை ஓட்ட வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

கூடவே அவரைக் குற்றம்சாட்டுபவர்கள் அனைவரும் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி என்று பிரிவினைவாதம் பேசுவதாக குற்றமும் சாட்டியிருக்கிறார் அமலா பால்.

போலி முகவரி கொடுத்து புதுவை அரசை ஏமாற்றியதுகூட அமலாபாலுக்கு தவறாகத் தெரியவில்லை. ஆனால், இதனை சுட்டிக் காட்டுபவர்களெல்லாம் மலையாளி, தமிழன் என்கிற குறுகிய மனப்பான்மை உடையவர்களாம்.. என்னவொரு தேசிய சிந்தனை..?

இந்தம்மா இந்த விஷயத்தில் இந்திய அரசையும் சேர்த்துதான் ஏமாற்றியிருக்கிறார். இதாவது இந்தம்மாவுக்கு புரிஞ்சதா இல்லையா..?

தான் பயன்படுத்தப் போகும் கேரள மாநிலத்திலேயே தான் வாங்கிய அந்த மெர்சிடிஸ் காருக்கு 20 லட்சம் ரூபாயை வாகன வரியாக அமலா பால் கட்டியிருந்தால், கேரள மாநிலத்தில் இருந்து மத்திய அரசின் பொதுத் தொகுப்புக்கு போக வேண்டிய வரியில் இந்தப் பணத்தில் இருந்தும் 40 சதவிகிதம் சென்றிருக்கும். ஆக இந்தக் கடிதத்தில் அவர் தலை மேல் தூக்கி வைத்து பேசும் இந்தியாவின் மத்திய அரசையும் சேர்த்தே அமலா பால் ஏமாற்றியிருக்கிறார்.

நல்லா பேசுறாங்கய்யா பேச்சு..!?

இந்த சமாளிப்புக் கடிதத்தை எழுதிக் கொடுத்த உத்தமர்களுக்கும், நடிகை அமலா பாலுக்கும் மத்திய அரசு ‘சேவா ரத்னா’ விருது கொடுத்து கவுரவிக்கலாம்..!

மிகப் பொருத்தமாக இருக்கும்..!

Our Score