full screen background image

அமலாபாலுக்கு 2-வது திருமணம் நடந்ததற்கான ஆதாரம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது..!

அமலாபாலுக்கு 2-வது திருமணம் நடந்ததற்கான ஆதாரம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது..!

நடிகை அமலா பால் அளித்தப் புகாரில் கைதான தயாரிப்பாளர் பவிந்தர்சிங் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு  ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்ததால்தான் பவீந்தர்சிங்கிற்கு ஜாமீன் கிடைத்ததாக அவருடைய வழக்கறிஞர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி  பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் தயாரிப்பாளர் பவிந்தர்சிங் ஆகிய இருவரும்  கடந்த ஓராண்டுக்கு முன்பாக சில மாதங்கள் குடியிருந்துள்ளனர்.

அப்போது  இருவருக்குள் சொத்து பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும் சில தொழில்களிலும்  முதலீடு செய்துள்ளனர். பிறகு பவிந்தர்சிங்கிடமிருந்து அமலாபால் சில  மாதங்களுக்கு முன்பு விலகி சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம்  விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் அமலாபால் புகார் மனு  கொடுத்திருந்தார். அதில் தன்னிடம், பவிந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர்  பணம் பெற்றிருந்தனர். அதைக் கேட்டபோது நானும் பவிந்தர்சிங்கும் இருக்கும்  புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார்.

அதன் பேரில்  டி.எஸ்.பி இருதயராஜ் தலைமையிலான போலீசார் பவிந்தர்சிங், அவரது தந்தை  சுந்தர்சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிந்து, பவிந்தர்சிங்கை  மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்  அவருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் பாலாஜி வானூர் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி,  பவிந்தர்சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன் பேரில்  அவர் உடனடியாக நேற்று முன்தினம் இரவே விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து  அவரின் வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், “அமலாபாலும், பவிந்தர்சிங்கும்  திருமணம் செய்து கொண்டது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு  நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிலும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு  ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தோம். அதில் இருந்த உண்மையை தெரிந்து கொண்ட நீதிபதி எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பவிந்தர்சிங்கை ஜாமீனில்  விடுவிப்பதாக உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் வெளியே வந்துள்ளார். அமலாபால் கொடுத்த இந்தப் புகாரும் பொய்யானது..” என்று தெரிவித்தார்.

தனக்கு 2-வது திருமணமே நடக்கவில்லை என்று அமலாபால் மறுத்து பேட்டியளித்திருந்த நிலையில் நீதிமன்றத்தில் அதற்கான சான்று தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் இந்த விஷயத்தில் குழப்பத்தைத் தந்திருக்கிறது.

Our Score