‘லிங்கா’ பட விவகாரம் – ரஜினியை இழுக்காதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்..!

‘லிங்கா’ பட விவகாரம் – ரஜினியை இழுக்காதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்..!

‘லிங்கா’ படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடுசெய்யும்படி கோரி நாளை வள்ளுவர் கோட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நடத்தப் போகும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை நேற்று இரவில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

“லிங்கா’ படம் வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும், வசூல் குறைவு ஏற்படுவதும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பாக அந்த திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் விலைபேசி முடிவு செய்த பிறகு திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப, நஷ்டம் இரண்டும் உண்டு. அதை யாரும் வெளியில் சொல்வதில்லை.

அதுபோன்றுதான் ‘லிங்கா’ திரைப்படம் மூலம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்த நஷ்டத்தை அந்த படத்தில் நடிகரிடம் கேட்பதைவிட தயாரிப்பாளரை அணுகி தங்கள் கோரிக்கையை சொல்லலாம்.

ஏனென்றால் தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தங்கள் விநியோகத்தில் சலுகை செய்து இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம் அதில் தவறில்லை. அதேசமயம் அந்த படத்தின் நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்துடன் வசூல் செய்கிறது. அதை யாரும் முன்கூட்டி சரியாக கணக்கிட முடியாது.

லாபம் கிடைக்கும்போது சந்தோஷப்பட்டுவிட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறபோது மட்டும் அந்த படத்தின் நடிகர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது.

எனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் ‘லிங்கா’ திரைப்பட தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்து கொடுத்த நடிகரை (ரஜினிகாந்த்) அணுகி நஷ்டத்தை பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்..”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Our Score