“நடிப்பதைவிட கிரிக்கெட் விளையாடுவதுதான் டென்ஷனா இருக்கு..” – சென்னை ரைனோஸ் கேப்டன் நடிகர் ஜீவாவின் பேட்டி

“நடிப்பதைவிட கிரிக்கெட் விளையாடுவதுதான் டென்ஷனா இருக்கு..” – சென்னை ரைனோஸ் கேப்டன் நடிகர் ஜீவாவின் பேட்டி

சினிமா நடிகர்கள் பங்கேற்கும் 5-வது செலிபிரட்டி கிரிககெட் லீக்(CCL) போட்டிகள் நாளை சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1-ம் தேதிவரையிலும் நடைபெற இருக்கிறது.

மும்பை, ஐதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், கொச்சி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை ரைனோஸ், தெலுகு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், வீர்மராட்டி, போஜ்புரி தபாங்க்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் இதில் பங்கேற்கின்றன.

சென்னை அணி தனது துவக்க ஆட்டத்தில் கேரள அணியை வரும் 11-ம் தேதி ஐதராபாத்தில் எதிர்கொள்கிறது.  அதைத் தொடர்ந்து பெங்களூரில் 18-ம் தேதி வீர் மராட்டி அணியுடனும், ஆமதாபாத்தில் 25-ம் தேதி மும்பை அணியுடனும் சென்னை அணி மோதுகிறது. 

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடிகர் விஷால் சமீபத்தில் விலகியதால் நடிகர் ஜீவா சென்னை அணிக்கு புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா தலைமையில் சென்னை ரைனோஸ் அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கேப்டன் ஜீவா பேசும்போது, “நடிகர்கள் ஆர்யா, பரத், விக்ராந்த், ஷாம், சாந்தனு, பிருத்வி, பாலாஜி, சோனு, போஸ் வெங்கட், ரமணா, உதய் உள்ளிட்டோர் சென்னை அணியில் விளையாடுகின்றனர். அணிக்கு துணை கேப்டனாக நடிகர் விஷ்ணு விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் தற்போது படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் சென்னை அணி கேப்டன் பதவியை தொடர முடியவில்லை. இதைத் தவிர அவரது விலகலுக்கு வேறு காரணங்களும் ஏதுமில்லை. இருந்தாலும் போட்டிகளில் விஷால் பங்கேற்பார்.

செனனையில் இந்தப் போட்டியை நடத்த வேண்டும் என்று நாங்களும்தான் மிக ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நடந்த போட்டிகளின்போது ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டேடியம் நிர்வாகிகள் திணறிவிட்டார்கள். அதுதான் இதற்குக் காரணமா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும் இந்த முறை சாம்பியன்ஸ் பட்டத்தை பெற முயற்சிப்போம். தற்போது அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். படத்தில் நடிப்பதைவிட இந்த டோர்ணமெண்ட் பயிற்சிதான் மிகுந்த டென்ஷனை கூட்டியிருக்கிறது..” என்றார்.

சென்னை ரைனோஸ் அணி கடந்த 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score