‘இசை ஞானி’ இளையராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் விவேக்..!

‘இசை ஞானி’ இளையராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் விவேக்..!

கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது தனது மனதுக்கு பிடித்த ‘இசை ஞானி’ இளையராஜாவின் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.

கற்றுக் கொண்ட அந்த இசைத் திறமையை சமீபத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்தபோது அதை வீடியோ பதிவாக்கிக் காட்டினாராம். இளையராஜாவும் இதைப் பார்த்து நடிகர் விவேக்கை பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

இதை பற்றி நடிகர் விவேக் நெகிழ்ச்சியுடன் பேசும்போது, “என் மகன் வாசித்த பியானோவில் இசை ஞானி’யின் பாடல்களை வாசிக்கப் பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்திற்காக ‘இசை ஞானி’ இசை அமைத்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ பாடல்.

சமீபத்தில் ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன்.

அப்போது அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, “உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன்…” என்று கூறி நான் வாசித்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ காணொளியை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு அவர் என்னைப் பெரிதும் பாராட்டினார்…” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து நடிகர் விவேக் மேலும் பேசுகையில், “இசை ஞானி’யுடனான அந்த உரையாடலின்போது நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும், அடுத்த சந்ததியினரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன்.

அதைக் கேட்ட இசை ஞானி, என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றும்விதத்தில் தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக” என்று எழுதி கையெழுத்திட்டு தந்துள்ளார்.

‘இசை ஞானி’யின் புகைப்படத்தையும் கையெழுத்தையும் எனது பியானோவில் விரைவில் பதித்து, அதில் ‘இசை ஞானி’தான் முதன்முதலில் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் மிக விரைவில் அந்த பியோனாவில் வாசித்து என்னை ஆசிர்வதிப்பதாய் கூறியுள்ளார்…” என்றார்.

 
Our Score