full screen background image

“கருத்து சொல்லுங்கள். தாக்குதல் வேண்டாம்” – ‘அஞ்சான்’ எதிர்ப்பாளர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்..!

“கருத்து சொல்லுங்கள். தாக்குதல் வேண்டாம்” – ‘அஞ்சான்’ எதிர்ப்பாளர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்..!

‘அஞ்சான்’ படத்தை ஆளாளுக்கு கொத்து புரோட்டோ போட்டுக் கொண்டிருப்பது பற்றி திரையுலக வட்டாரமே கவலையுடன் கவனித்து வருகிறது. அவர்களுக்கே இந்த விஷயம் எப்படி துவங்கியது..? யாரால் துவக்கப்பட்டது..? யாரால் வழி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை.. அந்த அளவுக்கு ஒரே நாளில் நடிகர் சூர்யாவும், இயக்குநர் லிங்குசாமியும் இணையத்தில் வறுக்கப்பட்டுவிட்டார்கள்.

சில நடிகர்கள் மட்டுமே “இது தவறு..” என்று கண்டித்துள்ளனர். “படம் பற்றி கருத்து சொல்ல அனைவருக்கே உரிமையுண்டு. ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்க வேண்டாம்…” என்று சொல்லி வருகின்றனர். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விவேக்கும் சேர்ந்துள்ளார்.

நேற்று டிவிட்டரில் இது குறித்து கருத்து சொன்ன விவேக், “அஞ்சான் படம் பார்த்தேன். ஸ்லீக்காகவும், நன்றாகவும்தான் உள்ளது. காரணமே இல்லாமல் ஒரு படத்திற்கு யாரும் கண்டனம் தெரிவிக்க வேண்டாம். கடின உழைப்பு பாராட்டப்பட வேண்டும். கலை படைப்புகளை விமர்சனம் செய்யலாம். ஆனால் அதிலும் ஒரு கண்ணியம் வேண்டும்.  அடுத்தவரை பார்க்கவிடாமல் செய்வதெல்லாம் ஆரோக்கியமற்ற செயல் நண்பர்களே…

ஆணவத்துடன் ஒரு படத்தை விமர்சிப்பவர்கள், அதை இணையதளத்திலோ, திருட்டு விசிடியிலோ பார்த்திருப்பார்கள். அப்படி பார்ப்பதும் அடுத்தவர்களை படத்தை பார்க்கவிடாமல் தடுப்பதும் குற்றமாகும். மக்களின் கருத்துகள்தான் இறுதி தீர்ப்பு. அதற்கு தலை வணங்க வேண்டும். நாம் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அது யாரோ ஒருவர் மீதான வெறுப்பாக இருக்க வேண்டியதில்லை…” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி அண்ணன் விவேக்கிற்கு..!

Our Score