full screen background image

நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கான வரி பற்றிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கான வரி பற்றிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

வெளிநாட்டில் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019 ஜனவரிக்கு முன் நடிகர் விஜய் காருக்கு முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம்…” என வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்துள்ளார். 

நடிகர் விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்-5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக  30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17-ம் தேதியன்று தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இதே கோரிக்கையுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மற்றும் அடையார் கேட் ஹோட்டல் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  இந்த மூன்று வழக்குகளையும் நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008-ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக் கோரி 2021-ம் ஆண்டுதான்  நோட்டீஸ் அளித்துள்ளதால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் நடிகர் விஜய்க்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

நடிகர் விஜய் வழக்கில் பதிலளித்த வணிக வரித்துறை, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகும், குறித்த காலத்தில் அவர் நுழைவு வரியை செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக சேர்த்து, மொத்தம் 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட அந்தக் காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய்  கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுரேஷ்குமார், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த 2019 ஜனவரியில் மாதம்  உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது. 

எனவே, நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது எனவும்,   2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம்” எனவும்  வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், “இறக்குமதி செய்த கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம்” என ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் தொடர்ந்த வழக்குகளில் உத்தரவிட்ட நீதிபதி, இந்த மூன்று வழக்குகளையும் முடித்து வைத்தார்.

Our Score