நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மாவீரன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த ‘மாவீரன்’ தலைப்பிலேயே நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாகத் தயாரித்து நடித்த படம் 1986—ம் ஆண்டு வெளிவந்தது நினைவிருக்கலாம்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தை ‘மண்டேலா’ படத்தை இயக்கிய இயக்குநரான மடோன் அஷ்வின் இயக்கி வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது,
அந்த வீடியோவின் துவக்கத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கும்பல் கடுமையாக தாக்குகிறது. பின்னர் சிவகார்த்திகேயன் எழுந்து அனைவரையும் திருப்பித் தாக்க தொடங்குகிறார். பொம்மலாட்டம் நிகழ்ச்சி போல ஒரு சாயலும் காட்சிகளில் தெரிகிறது. இந்த வீடியோவின் தொடக்கம் எப்படி பயங்கரமாக இருந்ததோ அதேபோல வீடியோவின் முடிவும் இத்திரைப்படம் பற்றிய ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப்பும் வித்தியாசமாக உள்ளது. வேறு மாதிரியான ஹேர்ஸ்டைலில் காட்சி அளிக்கிறார் சிவா. சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனின் இந்தப் புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் இந்த படத்தை உருவாக்குதால் இந்த படமும் அரசியல் சம்ம்மந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்று சிவாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.
மேலும் இந்த ‘மாவீரன்’ படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.