full screen background image

“எந்த ஆயுதத்தைக் கையிலெடுப்பது என்று நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்..” – நடிகர் விஜய் ரசிகர்களிடம் பேச்சு..!

“எந்த ஆயுதத்தைக் கையிலெடுப்பது என்று நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்..” – நடிகர் விஜய் ரசிகர்களிடம் பேச்சு..!

கடந்த 14-ம் தேதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் ‘கத்தி’ படத்தின் 50-வது நாள் விழாவை கொண்டாடினார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர்.

இந்த விழாவில் விஜய் மற்றும் ‘கத்தி’ படத்தில் நடித்த நடிகர் சதீஷ் மட்டுமே கலந்து கொண்டனர். இயக்குநர் முருகதாஸும், ஹீரோயின் சமந்தாவும் வரவில்லை..

இந்த விழாவுக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்று அங்கேயிருந்து பாளையங்கோட்டைக்கு காரில் வந்தார் விஜய்.

விழா மேடையில் பேசிய நடிகர் விஜய், “மனிதனாய் வாழ்வது பெருமைக்குரிய விஷயம். ஒரு மனிதன் நிறைய தேவைகள் உள்ளன. அதில் முக்கியமான 3 தேவைகள் இந்த நெல்லையில் உள்ளது. ‘திரு’ என்றால் மரியாதை. ‘நெல்’ என்றால் உணவு. ‘வேலி’ என்றால் பாதுகாப்பு. இதைத் தவிர நான்காவதாகவும் ஒன்று உள்ளது. அதுதான் அல்வா. நெல்லுக்கு வேலி கொடுத்த சாமிக்கு கோவில் கட்டி கும்பிடுவது இந்த திருநெல்வேலியில்தான்..

விவசாயத்துக்கு பெயர் பெற்ற இந்த நெல்லையில் கத்தி படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுவது பெருமையாக உள்ளது.  வெற்றிக்கும், தோல்விக்கும் வித்தியாசம் உள்ளது. கடமையைச் செய்தால் வெற்றி.. கடமைக்குச் செய்தால் தோல்வி. இயக்குநர் முருகதாஸ் தனது கடமையைச் சரியாகச் செய்ததால் கத்தி படம் வெற்றி பெற்றுள்ளது. நானும் நடிகனாக எனது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளேன்.

சினிமா என்பது கால்பந்து விளையாட்டை போன்றது. பத்து பேரின் பங்களிப்பு இருந்தால்தான் ஒரு கோல் போட முடியும். ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு கோல் போட 11 பேர் தடுப்பார்கள். பல மடங்கு எதிர்ப்பு இருக்கும். அதுதான் வாழ்க்கை.

எந்தச் செயலைச் செய்தாலும் எதிர்ப்பு இருக்கும். தட்டிப் பறித்து வாழ்வதைவிட விட்டுக் கொடுத்து வீழ்வதே மேல். அதற்காக குனிந்து கொண்டே இருக்கக் கூடாது. ஸாப்டா பேசினா ஸாப்டா பேசணும்.. வேற மாதிரி நாம ஸாப்டா இருக்கக் கூடாது. எப்ப தாக்கணுமோ அப்ப தாக்கணும். ஆனால் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதைத் தீர்மானிப்பது நமது எதிரிகள்தான்.

எனது ரசிகர்கள் தங்களது வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்காமல் என் படத்தை மட்டும் ரசிக்கும் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை. எல்லோருக்கும் குடும்பம் முக்கியம். மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்குக்கூட கிடைக்காத வரம். எனவே அந்த உறவுகளை யாரும் இழந்துவிடக் கூடாது. இனிமேலும் மன்றமே கதி என்று கிடக்கக் கூடாது. தங்களது தாய், தந்தையரையும் கவனிக்க வேண்டும்…” என்று பேசியுள்ளார்.

மொத்தமே 18 நிமிடங்கள்தான் மேடையில் இருந்தாராம் விஜய். ‘கத்தி’ படத்தின் வெற்றி விழா என்றாலும், எந்த திரையரங்கிற்கும் ஷூல்டு தரப்படவில்லையாம். மன்றத்தினர் வழங்கிய சில நலத்திட்ட உதவிகளை மட்டுமே வழங்கியிருக்கிறார்.  வழக்கம்போல சில ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு மேடையில் இடமில்லாததால் இப்போது உள்கட்சி சண்டை துவங்கியிருக்கிறதாம்..!

Our Score