full screen background image

‘கத்தி’ படத்திற்கெதிரான செய்திகளை இணையத்தில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு..!

‘கத்தி’ படத்திற்கெதிரான செய்திகளை இணையத்தில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு..!

சினிமா இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றியும் அவர் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை குறித்தும் சில சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், இது தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ என்ற படத்தை இயக்கியுள்ளேன். இந்த படம் தற்போது வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் இயக்கிக் கொண்டிருந்தபோது, மீஞ்சூரை சேர்ந்த கோபி என்பவர் எனக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார். அதில், ‘மூத்தக்குடி’ என்ற தலைப்பில் தான் ஒரு கதையை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நான் ‘கத்தி’ என்ற பெயரில் படம் இயக்குவதாக குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு தகுந்த விளக்கம் அளித்து பதில் நோட்டீசு அனுப்பினேன்.

இதன் பின்னர், சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் ‘கத்தி’ படத்துக்கு தடை கேட்டு கோபி வழக்கு தொடர்ந்தார். அதில், என்னுடைய ‘கத்தி’ படத்தின் கதையையும், கோபியின் ‘மூத்தக்குடி’ என்ற கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ‘போட்டியுள்ள சமுதாயத்தில், படத்தின் கதையை முன்கூட்டியே வெளியிட முடியாது’ என்று என் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை கோபி தாமதப்படுத்தினார். இதற்கிடையில், அவரது மனு கடந்த செப்டம்பர் 25–ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கோபி, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கோர்ட்டு வழங்கவில்லை.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ‘கத்தி’ படத்தின் கதை குறித்து கோபியும், கோவையை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் அவதூறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதுதவிர அசோக்குமார் என்பவரும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கத்தி படக் குழுவினர்களுக்கு எதிராக அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்.

இவர்கள், என்னை துன்புறுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால், சமுதாயத்தில் எனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

எனவே, சமூக வலைத்தளத்திலும், ஊடகத்திலும் அவதூறான தகவல் வெளியிடவும், பேட்டியளிக்கவும் கோபி உள்ளிட்ட 3 பேருக்கு தடை விதிக்கவேண்டும். அவர்கள் என்னைப் பற்றியும், கத்தி படத்தின் கதை குறித்தும், கத்திப் படக் குழுவினரை பற்றியும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “எதிர்மனுதாரர்கள் கோபி உட்பட 3 பேரும், அவர்களது ஆட்களும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றியும், ‘கத்தி’ படத்தின் கதை பற்றியும், அந்த படக்குழுவினரைப் பற்றியும், கருத்துகளை வெளியிட தடை விதிக்கின்றேன். அவர்கள் 3 பேரும் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘கத்தி’ படம் குறித்த கருத்துகளை அகற்ற வேண்டும்’ என்று உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

எதுக்கு இவ்ளோ பிரச்சினை..? இனிமேல் நான் இயக்கும் படங்களுக்கு இணையத்தில் யாருமே விமர்சனம் எழுதக் கூடாதுன்னு தடா உத்தரவு வாங்கிரலாமே..?

Our Score