full screen background image

“தரமணி’ போல ‘ராக்கி’ திரைப்படமும் வெற்றி பெறும்”- நாயகன் வசந்த் ரவி பேட்டி

“தரமணி’ போல ‘ராக்கி’ திரைப்படமும் வெற்றி பெறும்”- நாயகன் வசந்த் ரவி பேட்டி

இயக்குநர் ராம் இயக்கிய ‘தரமணி’ திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமான நடிகர் வசந்த் ரவி, தனது வாழ்க்கைப் பயணம் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் உரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, “எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் வளர்ந்தது, படித்ததெல்லாம் சென்னையில்தான். ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன்.

சிறு வயது முதலே சினிமா மீது எனக்கு அளவு கடந்த ஆர்வமிருந்தாலும் முதல் வருட மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது பேரார்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்கு அது பிடிக்கவில்லை. ‘எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய்’ என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன்.

இதன் பிறகு நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று ‘அனுபம் கெர் நடிப்பு பள்ளி’யில் நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன்.

actor vasanth ravi-4

ஆனால், எனது பெற்றோர்கள் ‘வெறும் மருத்துவப் படிப்பு மட்டும் போதாது; மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும்’ என்று என்னை வற்புறுத்தினார்கள். முதுகலை மருத்துவம் படித்தால் அந்தத் துறையிலிருந்து வெளியில் வரவே முடியாது என்ற பயத்தால் மருத்துவம் சார்ந்த ‘ஹெல்த் கேர் மேனேஜ்மேண்ட்’ படித்தேன். பிறகு சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

அவ்வப்போது இயக்குநர் ராமையும் சந்தித்து வந்தேன். ‘கற்றது தமிழ்’ படத்தைப் பார்த்ததும் இயக்குநர் ராமின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அது என் முதல் படத்திலேயே அமைந்ததை என் அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

ஒரு நாள் அவர் எனக்கு ஆடிசன் செய்தார். அது முடிந்தவுடன் அவருக்குத் திருப்தியாகி, ‘என்னுடைய அடுத்த படத்தில் நீதான் நாயகன்’ என்றார். ‘தரமணி’ படத்தின் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கூறினார் இயக்குநர் ராம்.

கதை, இயக்குநர், கதாநாயகன் என்று எல்லாமே தயாராகவுள்ள நிலையில் தயாரிப்பாளர் மட்டும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ‘தங்க மீன்கள்’ வெளியாகியது. அதைப் பார்த்துவிட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் ‘நானே ‘தரமணி’யையும் தயாரிக்கிறேன்’ என்று கூறினார்.

actor vasanth ravi-1

‘தரமணி’ படம் வெளியாகி வெற்றியடைந்து உலகளவில் என்னையும் கொண்டு போய் சேர்த்தது. என் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. விமர்சன ரீதியாகவும் பாராட்டு கிடைத்ததோடு  பல விருதுகளும் கிடைத்தன.

அந்த தருணத்தில் என் வாழ்க்கை மாறிவிட்டது. சினிமாத் துறைக்கு வந்த பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன்.

‘தரமணி’ படத்தின் வெற்றியைப் பார்த்து நான் தேர்ந்தெடுத்த துறை சரிதான் என்று எனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், சினிமா கலைஞர் என்றால் எந்தளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை என் மூலமாக அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

‘தரமணி’ படத்தில் என்னுடைய கடுமையான உழைப்பைப் பார்த்து, ‘இவ்வளவு சிரமத்தோடு இந்த துறையில் இருக்க வேண்டுமா..?’ என்று என் அப்பா என்னிடம் கேட்டார். ‘சிரமமில்லாமல் முன்னேற்றம் ஏது? சிரமப்பட்டால்தான் முன்னேற முடியும். எனவே நான் அந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று என் அப்பாவிடம் கூறினேன்.

அதன் பிறகு 40-க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டபோதும், புதிய படத்தின் கதை ‘தரமணி’ படத்திற்கு இணையாக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன். அப்படி நான் எதிர்பார்த்தது போல் அமைந்ததுதான் தற்போது உருவாகி வரும் ‘ராக்கி’ திரைப்படம்.

இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அவர் இறுதிச் சுற்று படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இயக்குநர் தியாகராஜா காமராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவர் கதையைக் கூறியதும் இப்படம் எனக்கு சரியான தேர்வாக இருக்கும் என்று எனக்குள் உள்ளுணர்வு தோன்றியது.

இப்படம் பழி வாங்கக் கூடிய கேங்ஸ்டர் பின்னணி கொண்ட படம். படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்.

‘தரமணி’யோடு ‘ராக்கி’யை ஒப்பீடு செய்தால் இது முற்றிலும் வேறுபட்ட கதை. இதேபோல் இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். என்னுடைய கனவு பாத்திரம் ‘சூப்பர் ஹீரோ’ கதையில் நடிப்பதுதான்.

மேலும், கதையில் எனது கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தால் இரண்டு நாயகர்களில் ஒருவராக… மற்றும் பல நாயகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Our Score