full screen background image

“என்ன வேண்டுமானாலும் நடக்கும்..” – நடிகர் வடிவேலு எச்சரிக்கை..!

“என்ன வேண்டுமானாலும் நடக்கும்..” – நடிகர் வடிவேலு எச்சரிக்கை..!

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வடிவேல் கதாநாயகனாக நடிக்கும் 4-வது படம் ‘எலி’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.

Eli Press Meet Stills (10) 

வடிவேலு வருவதற்கு நேரமானதால் சுமார் ஒன்றரை மணி நேரம் கால தாமதமாகவே நிகழ்ச்சி துவங்கியது. முதலில் ‘எலி’ படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்டது. பின்பு இயக்குநர் யுவராஜ் தயாளன் படத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்து பேசினார். தொடர்ந்து வடிவேல் பேச வந்தார்.

“சமீப காலமாக நான் எங்க போனாலும், ‘நீ ஏன் படத்தில் நடிக்கவில்லை?’ என்று கேட்டு ஜனங்கள் என்னை திட்டுகிறார்கள். கெட்ட, கெட்ட வார்த்தைல திட்டுறாங்களாம். என் காதுக்கும் வந்துச்சு. ‘தெனாலிராமன்’ முடிஞ்சு மூணு மாசம்தான ஆச்சு. அடுத்தும் இதே மாதிரி ஒரு நல்ல படமா கொடுக்கலாம்னுதான் வெயிட் பண்ணினேன்.

அந்த சமயத்தில்தான் டைரக்டர் யுவராஜ் தயாளன் என்னிடம் வந்து ‘எலி’ படத்தின் கதையை சொன்னார். பிடிச்சிருந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறோம். குழந்தைகளுடன், கூட்டம், கூட்டமாக வந்து பார்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். 

முந்தைய படங்களில் செந்தமிழில் பேசி நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் சாதாரணமான தமிழ்தான் பேசியிருக்கிறேன். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க அக்கூட்டத்துக்குள்ளேயே நுழைந்து உளவு வேலை பார்க்கும் ஒற்றன் கேரக்டர் என்னுடையது. அமெரிக்க கருப்பு மனிதன், பொம்பளை கேரக்டர்ன்னு 8 கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்துல ‘கண்ணனே’ன்னு தொடங்கும் ஒரு பாடலை நானே பாடியிருக்கிறேன். இது ஜெயிலில் இருந்து மன வேதனையுடன் ஒருவர் பாடுவது போன்ற பாடல்…” என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலைப் பாடியும் காட்டினார்.

தொடர்ந்து “ஆராதனா ஹிந்தி படத்தில் இடம் பெற்ற ஒரு ஹிந்தி பாடலை அப்படியே இந்தப் படத்தில் ரீமேக் செய்துள்ளோம். அந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் புடிச்ச பாட்டு. முறைப்படி ரைட்ஸ் வாங்கித்தான் செஞ்சோம். தாரா மாஸ்டர்தான் டான்ஸ் அமைத்துக் கொடுத்தார். நானும் சதாவும் டான்ஸ் ஆடியிருக்கோம். மலைப்பாங்கான இடங்கள்.. தேயிலைத் தோட்டம்.. இந்த மாதிரியான இடத்துலதான் இந்தப் பாடலுக்கு நல்ல லுக் கிடைக்கும்னு சொன்னாங்க. அதுனால மூணாறு போய் ஷூட் செஞ்சோம். இன்னும் டிஐ செய்யலை. அது செய்யாத காப்பியிருக்கு. வேண்ணா பார்க்குறீங்களா..?” என்று மீடியாக்களிடம் கேட்டுவிட்டு அந்தப் பாடலைத் திரையிட்டுக் காட்டினார்.

Eli Movie Stills (4)

மிக அழகான இசையமைப்புடன் கூடிய பாடல் அது. படம் வந்தபோது இந்தியாவெங்கும் பேசப்பட்ட பாடல் அது. இதே ‘ஆராதனா’ படம் தமிழில் ‘சிவகாமியின் செல்வன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது சிவாஜியும், வாணியும் இந்தப் பாடலுக்கு அதே லொகேஷனில் ஆடியிருந்தார்கள். இப்போது வடிவேலுவும், சதாவும்..! காலம்தான் எத்தனை மாற்றங்களைச் செய்கிறது..!?

மேலும் தொடர்ந்து பேசிய வடிவேலு, “இதுவொரு கனவுப் பாடல். ரேடியோல பாட்டு துவங்கும்போது எங்க கனவும் ரேடியோவுக்குள்ள போயி துவங்கும். மூணாறுல போயி நாங்க ஆட்டமெல்லாம் ஆடிட்டு திரும்பவும் அதே ரேடியோ பொட்டிக்குள்ள நுழைஞ்சு கனவு கலைஞ்சு வெளில வந்திருவோம்..” என்றார் அந்தப் பாடலின் கிறக்கத்துடன்..

முத்தாய்ப்பாக “எலி என்றால் அழிக்கக் கூடியதுன்னு நினைக்க வேண்டாம். இது நல்ல எலி. படம் 1960-களின் காலக்கட்டத்தில் நடப்பது போன்று எடுத்துள்ளோம். எப்பவும் ஓல்டு இஸ் கோல்டுதான்.. இந்த மாதக் கடைசியில் இந்தப் படம் ரிலீஸாகும்…” என்றார்.

பின்பு கேள்வி-பதில் சீஸன் துவங்கியது.

முன்பேயே “இந்தப் படத்தைப் பற்றி மட்டுமான கேள்விகளுக்கு நடிகர் வடிவேலு பதிலளிப்பார்” என்று பி.ஆர்.ஓ. நிகில் முருகன் சொல்லியிருந்ததால் முதலில் சினிமா தொடர்பான கேள்விகளே அதிகம் பறந்து வந்தன.

“படத்தில் சதா உங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாரே..?” என்ற கேள்விக்கு, “படத்தில் நான் எலியாக நடிக்கிறேன். சதா மீது ஒரு தலை காதல் கொண்டவனாக வருகிறேன். கதாநாயகிகளுடன் நம்மால் அப்படித்தானே நடிக்க முடியும். அவ்வளவுதான்.” என்றார். 

“காமெடி நடிகர்களுடன் நடிக்க ஹீரோயின்கள் கிடைப்பதில்லைன்னு சொல்றாங்களே..?” என்று கேட்டதற்கு திடீரென்று உஷ்ணமாகிவிட்டார் வடிவேலு. “நாங்களென்ன ஹீரோயின்களை கூப்பிட்டு கல்யாணம் பண்ணி தலை தீபாவளியா கொண்டாடப் போறோம்..? வீட்ல வெளக்கமாறு பிஞ்சிரும்.

கதைக்கு தேவைப்படுவதால்தான் கதாநாயகிகளை அழைக்கிறோம். இவ இல்லேன்னா இன்னொருத்தி. அவளும் இல்லைன்னா வேறொருத்தி. பணத்தை விட்டெரிஞ்சா வந்துட்டுப் போறாளுங்க. இந்தப் படத்தில் எனக்கும் பெரிய அளவில் காதல் காட்சியெல்லாம் கிடையாது. ஒரு தலை காதலாகவே படம் முழுக்க வரும்…” என்றார்.

வடிவேலு ஏன் இப்படி பொங்கினார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் “காமெடி நடிகர்களுடன் நடிக்க ஹீரோயின்கள் வருவதில்லை. ஒத்துக் கொள்வதில்லை. எஸ்கேப்பாகுகிறார்கள்..” என்று அவர்தான் ‘தெனாலிராமன்’ படத்தின் பிரஸ்மீட்டில் ஒப்பாரி வைத்தார். இன்றைக்கு அதே கேள்வியை கேட்டால் எகிறுகிறார்.. ம்ஹூம்.. அரசியல் சகவாசம் அதிகமானாலே இப்படித்தான் ஆவும்..! 

“எலி’யும், ‘புலி’யும் ஒரே தேதியில் மோதுமா?” என்று கேட்டதற்கு, “நீங்களே முடிச்சு போட்டு ஒரு வழி செய்துவிடுவீர்கள் போல… கதாநாயகர்கள் எல்லாம் ‘சிக்ஸ்-பேக்’குடன் நடிக்கிறார்கள். நமக்கு ‘சிங்கிள் பேக்’தான். நான் ஆக்சன் ஹீரோவோ, அர்னால்டோ அல்ல. எனக்கு என்ன முடியுமோ, அதைத்தான் நான் செய்கிறேன். யாருக்கும் நான் போட்டி அல்ல. இந்தப் படத்தில்கூட ஒரு சாதாரணமான எலி என்ன செய்யுமோ அதே மாதிரிதான் காமெடியா பைட் பண்ணியிருக்கேன்..” என்றார்.

“தொடர்ந்து காமெடியனாக மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிப்பீர்களா..?” என்று கேட்டதற்கு, “இதுவரைக்கும் 10 கதைகளை கேட்டு வைச்சிருக்கேன். எல்லாமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கதைகள்தான். அதில் ஒண்ணு காமெடியான அரசியல் கதை. அதில் முதல்வராக நடிக்கவுள்ளேன். சில படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்தும் நடிக்கப் போகிறேன்..”என்றார்.

“ரஜினியுடன் மீண்டும் நடிப்பீர்களா..?” என்று கேட்டதற்கு, “நானும் ரஜினியும் சேர்ந்து கடைசியா நடிச்ச ‘சந்திரமுகி’ பெரிய வெற்றி பெற்ற படம். அந்தளவு கதையம்சம் கொண்ட கதை கிடைத்தால் நிச்சயமா நடிப்பேன்.” என்றார்.

“இப்போதுள்ள காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிப்பீர்களா..?” என்று கேட்க.. “இப்போ யார் காமெடி நடிகர்..? அவங்க தயாரா இருந்தா நானும் ரெடிதான். ஆனால் அதற்கான சூழல் இப்ப இல்லை..” என்றார்.

“சகாப்தம் படம் பார்த்தீங்களா..?” என்று கேட்க.. ஒரு பத்து வினாடிகள் கேள்வி கேட்ட நிருபரை முறைத்துப் பார்த்தார் வடிவேலு. அரங்கமே அதிர்ந்தது. “எதுக்கு.. நான் நடிச்ச படத்தை பார்க்கவே நேரமில்லை.. இதுல எங்க மற்ற படத்தைப் பார்க்குறது..?” என்றார்.

“வருகிற தேர்தலில் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா..?” என்று கேட்டதற்கு, “இப்போதைக்கு அரசியல் கடையை பூட்டி வைச்சிருக்கேன். சினிமா கடையை மட்டும்தான் திறந்து வைச்சிருக்கேன். இதிலேயே வியாபாரம் இப்போ நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.. தேவைப்பட்டால் அரசியல் கடையை திறப்பேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ‘எலி’ எங்கே தாவும் என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. இன்னும் டைம் இருக்குல்ல. இப்போ எதையும் சொல்ல முடியாது..” என்றார். (அப்ப ஏதோ திட்டமிருக்கு..!) 

Our Score