நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் அந்தச் சங்கத்தில் பொருளாளராக இருந்த நடிகர் வாகை சந்திரசேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து ஜூனியர்விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டி இது :
‘‘நடிகர் சங்கத்தில் நான் ஆறு ஆண்டுகள் பொருளாளராக இருந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து, நான் அறிந்து அங்கே ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடக்கிறது என்று எனக்குத் தெரிந்து இருந்தால் நான் எப்போதோ வெளியேறி இருப்பேன்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானத்தை சரத்குமார் கொண்டு வந்தார். அப்போது நடிகர் சங்கத்தில் ‘பொருளாளர் பொறுப்பில் இருந்த என் பெயரைப் போடக் கூடாது’ என்று எச்சரித்தேன்.
ஜெயலலிதா திரைப்பட நூற்றாண்டு விழாவை நடத்தியபோது நான் மட்டும்தான் அதனை எதிர்த்து அறிக்கை கொடுத்தேன். ஜனாதிபதியை அழைத்து தனக்குத்தானே விருது வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா. ‘இந்தியாவிலேயே சினிமாவில் சீனியராக இருக்கக் கூடியவர் கலைஞர் ஒருவர்தான். 1948-ல் திரைப்படத்திற்கு வசனம் எழுத ஆரம்பித்தவர். அவரை அங்கீகரிக்காமல் தமிழ்நாட்டில் ஒரு விழாவா..? அதற்கு சினிமாகாரர்கள் நீங்கள் எல்லாம் போவீர்களா…?’ என்று கேட்டேன்.
நடிகர் சங்கத்தில் தலைவர் பதவியில் இருக்கும் சரத்குமார் எப்போதும் ஜெயலலிதாவை துதிபாடுகிறார். கலைஞரை வசைபாடி வருகிறார். இது குறித்து ஏற்கெனவே பல முறை சரத்குமாரை எச்சரித்திருக்கிறேன். அவர் திருந்தியபாடு இல்லை. அதனால்தான் இப்போது சங்கத்திலிருந்து வெளியேறினேன்..” என்று கொந்தளித்தார்.
நன்றி : ஜூனியர்விகடன் – 24-05-2015









