நடிகர் சங்கத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் பேட்டி இது :
“விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, திடீரென தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்தார்.
‘ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவராக இருக்கும் ஒருவர் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பது நியாயமில்லை’ என்று விஜயகாந்துக்குக் கடிதம் எழுதினேன். அப்போது சரத்குமார், ‘நல்லா சூப்பரா எழுதி இருக்கீங்க’ என்று என்னைப் பாராட்டினார்.
அதன் பின் அகில இந்திய சமத்துவ அரசியல் கட்சியை ஆரம்பித்தார் சரத்குமார். அதன் பின் நடிகர் சங்கத் தேர்தல் வந்தது. அப்போதும் விஜயகாந்துக்கு எழுதிய கடிதம்போல் சரத்குமாருக்கும் கடிதம் எழுதினேன். ‘என்ன எல்லாருக்கும் ஒரே மாதிரி கடிதம் எழுதிகிட்டே இருக்கீங்க’ என்று என்னைக் கடிந்து கொண்டார் சரத்குமார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நான்தான் நிறுவனர். ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகு நிறுவனர் பொறுப்பில் இருந்து அப்போதே விலகிக் கொண்டேன். இப்போது ஆலோசகராக மட்டுமே இருந்து வருகிறேன்.
சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத்தான் எம்.எல்.ஏ ஆகி இருக்கிறார். அந்தக் கட்சியை சந்தோஷப்படுத்துவதற்காக நடிகர் சங்கத்தை அவர் பயன்படுத்தக் கூடாது.
நடிகர் சங்கத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் இருந்தால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சங்கம் யாருடைய கோபத்துக்கும் ஆளாக வேண்டியது இல்லை.
நடிகர் சங்கத்தின் சட்ட விதிப்படி ஒருவர் ஒரே பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது. சரத்குமார் மூன்றாவது முறை நிற்கிறார். ராதாரவி பல முறை நின்று வருகிறார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு சிவகுமார் அல்லது நாசர்தான் வர வேண்டும்’’ என்று விளக்கினார்.
நன்றி : ஜூனியர்விகடன் – 24-05-2015