நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வருகிறார்கள். ஒருவர் பற்றி ஒருவர் நைச்சியமாக புகார் சொல்லி வோட்டுக்களை வேட்டையாடி வருகிறார்கள்.
இன்று வெளிவந்துள்ள ‘ஜூனியர் விகடனில்’ நடிகர் சங்கத் தேர்தல் குறித்த கட்டுரையில் சம்பந்தப்பட்டவர்கள் பேட்டியளித்து தங்களது தரப்பு நியாயத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
அதில் நடிகர் நாசரின் பேட்டி இது :
‘‘எல்லா சங்கங்களிலும் நடப்பது போலத்தான் இங்கே தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். எங்கள் நிலைமையை விளக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சரத்குமாரும் ராதாரவியும்தான் ஏனோ இதனை பெரிதுபடுத்துகிறார்கள். தேர்தலில் ஒருவரை எதிர்த்து இன்னொருவர் போட்டி போடுவது இயல்பு. பொதுச் செயலாளராக இருக்கும் ராதாரவிதான், எங்களுடன் ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.
தமிழ்நாடு முழுக்க வாழ்கிற நாடக நடிகர்களைச் சந்தித்து நடிகர் சங்கத்தின் உண்மையான நிலைமையை எடுத்துச் சொல்வோம். அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பது தெரியாதா என்ன? நாடெங்கிலும் வசிக்கிற நாடக நடிகர்களை சந்தித்து அவர்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நாங்கள் எல்லாவற்றையும் பாஸிட்டிவ்வாகத்தான் பார்க்கிறோம்.
நாடக நடிகர்களைப் போய் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் நாங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும்..? எங்களுக்கு யாரும் பின்புலம் இல்லை. எங்களிடம் உண்மை இருக்கிறது. அதுதான் எங்களுக்குத் துணை. வேறு யாருடைய ஆதரவும் எங்களிடம் இல்லை. நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ அதன்படி தேர்தல் நடக்கும். ஜெயிப்பது, தோற்பது என்பது அடுத்தகட்டம். நாங்களும் வெற்றி பெற உழைப்போம்.
தலைவர் பதவிக்குப் போட்டியிட முதலில் எனக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நாடகக் கலையைப் பெரிதும் மதிக்கிறவன் நான். அதன் பெருமையை பறைசாற்றும்விதமாக ‘அவதாரம்’ படத்தைத் தயாரித்து, நடித்தவன். இன்றும் நாடகங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரத்குமாரும், ராதாரவியும் என்னை ஏதோ நாடக நடிகர்களுக்கு எதிரானவன்போல் சித்திரித்து அரசியல் செய்கிறார்கள்..’’ என்று ஆதங்கப்பட்டார்.
நன்றி : ஜூனியர்விகடன் – 24-05-2015