அஞ்சான் படம் பற்றி இணையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் திடீரென்று முளைத்ததன் காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை.
ஆனால் தியேட்டர்களில் இந்தப் படத்துக்கு இன்னும் 2 நாட்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காது என்பதுதான் உண்மை நிலை. சில நேரங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகள்கூட படத்தின் விளம்பரமாக உதவும் என்பார்கள். அது இந்தப் படத்துக்கும் பொருந்திவிட்டது எனலாம்.
எப்போதும் வியாழன், வெள்ளியன்றே பெரிய படங்களுக்கு பிரஸ் ஷோ போடுவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு இன்று போடவிருந்த ஷோ, இணையத்தில் எழுந்த கடும் எதிர்ப்பை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக நேற்று மாலை நடந்தது..
அதிசயமாக இயக்குநர் லிங்குசாமியுடன் நடிகர் சூர்யாவும் நேரில் வந்து பத்திரிகையாளர்களிடத்தில் படத்தைப் பற்றி பேசியது கூடுதல் விஷயம்..
சூர்யா பேசும்போது, “என்னோட எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த ‘அஞ்சான்’ படம் 1500 தியேட்டர்கள்ல ரிலீசாகியிருக்கு. எந்த ரசிகரும் டிக்கெட் கெடைக்கலேன்னு வீட்டுக்கு திரும்பி போகக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக இத்தனை தியேட்டர்கள் ரிலீஸ் பண்ணிருக்காங்க. ரிலீசான எல்லா இடங்களில் இருந்தும் நல்ல பாஸிட்டிவ்வான ரிப்போர்ட் வந்துக்கிட்டிருக்கு. இந்தப் படத்தை ரசிகர்கள் குடும்பத்தோட வந்து பார்க்கிறாங்க.
அஞ்சான்’ படம் ஐந்து பேருக்கு மட்டும் பண்ற விருந்து கிடையாது. எல்லாருக்கும் பண்ற பெரிய விருந்து. எல்லாருக்கும் என்ன பிடிக்கணும்னு மட்டும்தான் பார்த்து கொடுக்க முடியும்… ஒரு சிலருக்கு மட்டும் பிடிச்ச மாதிரியெல்லாம் கொடுக்க முடியாது.
இப்போ எனக்கென்ன வருத்தம்ன்னா.. படத்தைப் பத்தி நெறைய நெகட்டிவிட்டி கிளம்பி இருக்கு. தேவையில்லாம விஷயம் இல்லாத விமர்சனங்களா இருக்கு. இதில் இன்னொன்னு, சிலர் வேண்டுமென்றே நெகடிவ்வான விஷயங்களை பரப்பி வருவதுதான். இதில் படம் பார்க்காதவர்கள்கூட சேர்ந்து கொண்டதுதான் ரொம்ப வேதனை. இப்படி தேவையில்லாமல் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு ஒருவரின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பது நல்ல விஷயம் இல்லை.
பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் உங்களுக்கு தோன்றியதை அப்படியே எழுதினாலே எங்களுக்கு மிகப் பெரிய பலம். நான் செலக்ட் பண்ணி படம் பண்ணிட்டு வர்றேன், நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா… அது நீங்க, பத்திரிகைக்காரங்க நல்லது கெட்டது சொல்லி, ஒரு வேலி போட்டுதான் இந்த இடத்தை காமிச்சிருக்கீங்க. ஆனால், போற தடம்லாம் முள்ளை போடாதீங்க… இந்தப் படத்துல இப்படியொரு நெகட்டிவிட்டி இருக்க வேண்டாம்கறதுதான் எனக்கு ஆசை…” என்று வருத்தப்பட்டார் சூர்யா.
நியாயமான வருத்தம்தான்.. படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள்.. ஆனால் தனி நபர் விமர்சனம் வேண்டாம் என்கிறார்.. இதில் படம் பார்க்காதவர்களெல்லாம் உடனடியாக ஷேர் செய்து அதைப் பரப்பி வருவதை என்னவென்று சொல்வது..?