‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ திரைப்படம் கதாநாயகன் புரமோஷனை கொடுத்தது.
சௌந்தரராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ஒரு கனவு போல’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தரராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி, அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இது பற்றி நடிகர் சௌந்தரராஜா கூறுகையில், “இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்த சினிமாத் துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். இதனால் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக் குழுவிற்கும் எனது நன்றிகள்.
என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக் கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்த பின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன். இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
‘தங்க ரதம்’ படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது.
‘பரஞ்சோதி’யாக ‘சுந்தரபாண்டியனில்’ ஆரம்பித்த என் பயணம், ‘பரமனாக’ ‘தங்க ரதம்’ படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். மகிழ்கிறேன்.
என்னை பாராட்டி உற்சாகப்படுத்தி நான் வளர உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார் உற்சாகமாக..!