full screen background image

ஆதிராஜனின் ‘அருவா சண்டை’யில் நாயகியானார் மாளவிகா மேனன்..!

ஆதிராஜனின் ‘அருவா சண்டை’யில் நாயகியானார் மாளவிகா மேனன்..!

தமிழ்த் திரையுலகின் முதல் முழுமையான டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி, இயக்கி வெற்றி பெற்ற இயக்குநரான ஆதிராஜன், தற்போது ஒரு கபடி வீரனின் காதல் கதையை கெளரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘அருவா சண்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் கபடி வீரனாக ராஜா அறிமுகமாகிறார். வில்லனாக ‘ஆடுகளம்’ நரேன் நடிக்கிறார். மற்றும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்கப் போகிறார்கள்.

‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, ‘தகராறு’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்த தரண் இசையமைக்கும் 25 – வது படம் இது. அமர்க்களமான ஐந்து பாடல்களை 7-வது முறையாக தேசிய விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்.

கன்னடத்தில் ‘ஸ்டைல் கிங்’, ‘மிரர்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சதோஷ் பாண்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ‘காஸ்மோரா’, ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘வல்லினம்’ படங்களுக்கு படத் தொகுப்பு பணியை செய்தவரும் தேசிய விருது பெற்றவருமான வி.ஜே.சாபு ஜோசப், இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

கலை இயக்கம் – ஏ.டி.ஜெ., சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வம், நடனம் – சிவசங்கர், தீனா, தயாரிப்பு மேற்பார்வை ; சங்கர் ஜி. டிசைன்ஸ் சபீர். ஒயிட் ஸ்கிரீன் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.ராஜா பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

malavika menon

இந்தப் படத்திற்காக ஹீரோயினை வலைவீசி தேடிக் கொண்டிருந்த இயக்குநர் ஆதிராஜன், தற்போது ஒரு வழியாக நாயகியைப் பிடித்துவிட்டார். மலையாள மண்ணை சொந்தமாகக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மேனன் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இவர் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு தங்கையாகவும், ‘இவன் வேற மாதிரி’ படத்தில் சுரபிக்கு தங்கையாகவும் நடித்தவர். அதோடு ‘விழா’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஒப்பந்தமானது குறித்து பேசிய நடிகை மாளவிகா மேனன், “இந்தப் படத்தின் கதையை ஆதிராஜன் ஸார் சொன்னபோது அசந்துவிட்டேன். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்தபோது என்னையும் அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்தப் படம் தமிழ்த் திரையுலகத்தில் எனக்கு ஒரு அஸ்திவாரத்தை போட்டுத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பெரிய ஹீரோயின்களுக்கு இருப்பதுபோல இந்தப் படத்தில் எனக்கென்று தனியாக அறிமுக பாடல் காட்சியும் இருப்பதினால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் நான் பிஸியான நடிகையாகிவிடுவேன்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

எதிர்பார்ப்பு மெய்ப்பட வாழ்த்துகிறோம்..!

Our Score