விஜய்யின் 61-வது படத்தின் தலைப்பு ‘மெர்சல்’..!

விஜய்யின் 61-வது படத்தின் தலைப்பு ‘மெர்சல்’..!

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 61-வது படத்திற்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த மூன்று வேடங்களுக்கும் பொருத்தமான ஹீரோயின்களாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேன்ன் மூவரும் நடிக்கின்றனர்.

மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, வடிவேல், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் அணி வகுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்குநர் – முத்துராஜ், சண்டை பயிற்சி – அனல் அரசு, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், திரைக்கதை – விஜயேந்திர பிரசாத், ரமணகிரிவாசன், கதை, வசனம், இயக்கம் – அட்லீ.

ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் முரளி ராமசாமியும், ஹேமா ருக்மணியும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இளைய தளபதி விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லீ இவர்களுடன் ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனம் இணையும் முதல் படம் இதுவாகும்.

சென்னையில் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே  சமயத்தில் இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகி வருவது படத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இத்தனை நாட்கள் தலைப்பு வைக்காமலேயே ‘விஜய்-61’, ‘தளபதி-61’ என்று அடைமொழிகளால் அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு, இன்றைக்கு நல்ல நாள் பார்த்து தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த ‘மெர்சல்’ என்ற தலைப்பு பக்கவான லோக்கல் கலாய்ப்பு வார்த்தை. ‘மெர்சலாயிட்டான்பா’ என்ற சென்னை பாஷைக்கு ‘பயந்து விட்டான்’.. ‘குழம்பிவிட்டான்’ என்று அர்த்தம் கொள்ளலாம்..!

நாளைய தினம் விஜய்க்கு பிறந்த தினம் என்பதால் அதனை முன்னிட்டு இன்று மாலை தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதேபோல் விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த சூரன் படத்தின் டீஸரை வெளியிடவிருப்பதாகவும் தகவல்.

Our Score