full screen background image

“ஒரேயொரு இயக்குநர் சிகரம் அது கே.பாலசந்தர்தான்…” – நடிகர் சிவக்குமாரின் புகழாரம்

“ஒரேயொரு இயக்குநர் சிகரம் அது கே.பாலசந்தர்தான்…” – நடிகர் சிவக்குமாரின் புகழாரம்

‘இயக்குநர் சிகரம்’ மறைந்த திரு.கே.பாலசந்தர் அவர்களின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இயக்குநர் சிகரத்தின் உதவியாளரான மதுரை என்.மோகன் முன்னெடுத்து நடத்தினார்.

இவ்விழாவில், இயக்குநர் சிகரத்தின் சிஷ்யரான சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் விவேக், டெல்லி கணேஷ்,  நடிகை சச்சு, இயக்குநர்கள் மனோபாலா, பேரரசு, ரமேஷ் கண்ணா, சுரேஷ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.பி.உதயகுமார், அஸ்லாம், ஐந்து கோவிலான், எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகளும் கவிதாலயா மற்றும் மின் பிம்பங்களில் பணியாற்றிய பல ஊழியர்களும், திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

sivakumar-2

இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, “என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது ஐயா கே.பாலசந்தர் அவர்கள்தான்.

1972-ம் வருஷம் ஒரு நவம்பர் மாதம். வாஹினி ஸ்டூடியோவில் அரங்கேற்றம் படத்தின் படப்பிடிப்பு. திருநெல்வேலியில் இருக்கும் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்துப் பெண் பிரமீளா. நான் அதே ஊரில் இருக்கும் ஒரு முதலியார் வகுப்புப் பையன். நானும் பிரமீளாவும் பள்ளியில் ஒன்றாகப் படிப்போம்.

arangetram-stills-3

கிழிஞ்ச பாவாடை, தாவணியைப் போட்டுட்டு பள்ளிக்கு வரும் பிரமீளா. இதனால் நான் புதிய பாவாடை, தாவணியை பிரமீளாவுக்கு வாங்கித் தருவேன். இது என்னோட அப்பாவுக்குத் தெரிஞ்சு போயிரும். அவர் உடனே கூப்பிட்டு திட்டுவாரு. டேய்.. டேய்ன்னுவாரு.

உடனே நான் சொல்லுவேன்.. “என்ன சொல்லப் போறீங்க. ‘நீ என் புள்ளையே இல்லை.. என் மூஞ்சிலயே முழிக்காத.. வீட்டைவிட்டு வெளில போ’ன்னு.. அதானே.. நீங்க சொல்லி நான் வெளில போறதுக்குப் பதிலா நானே வெளில போறேன்”னு சொல்லிட்டு வீட்டைவிட்டு வெளில வருவேன்.

இந்தக் காட்சியில் பொதுவா எல்லா சினிமாவிலேயும் அப்பாக்கள்தான் வசனம் பேசுவாங்க. ஆனால் பாலச்சந்தர் அதை அப்படியே மாற்றியமைத்து இப்படி நானே வசனம் பேசி சொல்லிட்டு வெளில போறதா வைச்சிருந்தார்.

arangetram-stills-2

நான் வீட்டைவிட்டு வெளில போயி மிலிட்டரில சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இங்க பிரமீளா அவங்க தம்பி கமல்ஹாசனுக்கு மெடிக்கல் சீட் வாங்குறதுக்காக சென்னைக்கு போயி ஒரு பெரியவரைப் பார்த்து கேப்பாங்க. அவர் பிரமீளாவை படுக்கைக்குக் கூப்பிடுவார்.

பிரமீளா வீட்டுல நிறைய குழந்தைகள்ன்றதால இவன் ஒருத்தன் தலையெடுத்தால்தானே குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு நினைத்து பிரமீளாவும் உடன்பட்டிருவாங்க. ஆனால் அதுக்குள்ள மெரீட்லேயே கமலுக்கு சீட் கிடைச்சிரும். அவரும் காலேஜூக்கு போயிருவாரு.

பிரமீளாவும் இழந்தது இழந்தாச்சு.. இனிமேல் என்ன செய்ய என்று நினைத்து பாலியல் தொழிலாளியா மாறிருவாங்க. நான் ஹைதராபாத்துல ராத்திரி நேரத்துல அது மாதிரி ஒரு வீட்டுக்குப் போவேன். அங்கே போய் கதவைத் தட்டினால் யெஸ் கம் இன் என்று குரல் வரும். திரும்பிப் பார்த்தா அது பிரமீளா.

arangetram-stills-1

நான் “லலிதா”ன்னு அதிர்ச்சியா கூப்பிடுவேன். அவங்க “தங்கவேலு”ன்னு அதிர்ச்சியா பார்ப்பாங்க. “என்னம்மா.. எப்படி இருக்குற.. அப்பா, அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா.. தம்பி, தங்கைகளெல்லாம் சவுக்கியமான்னு விசாரிப்பேன். சரி வரேம்மா”ன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டெப் நடந்துட்டு திரும்பி, “ஒரு உண்மையைச் சொல்லலின்னா என் இதயம் சுக்குச் சுக்கா வெடிச்சிரும்மா.. ஒரு விலைமாது வீட்டுக்கு வழி கேட்டேன்மா.. இந்த வீட்டுக்கு வழி சொல்லிட்டான்ம்மா ஒரு பாவி..” என்பேன். அதுக்கு பிரமிளா “அவன் பாவி இல்லை தங்கவேலு. பழக்கப்பட்டவன்தான்.  நானும் உண்மையைச் சொல்லலின்னா என் இதயமும் வெடிச்சிராதா தங்கவேலு.. நாட்டைக் காப்பாத்த நீ உன் உயிரையே தியாகம் பண்ற.. ஒரு பொண்ணு எதைக் காப்பாத்தணுமோ அதை நான் விலை பேசிக்கிட்டிருக்கேன்…” என்பார்.

sivakumar-mohan

“விலை பேசுறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையாம்மா…?” என்பேன். “இந்த அளவுக்கு விலை போறது இது ஒண்ணுதானே..?!” என்பார் அவர். இந்தக் காட்சி 1972 நவம்பர் 8, 9 தேதிகளில் படமாக்கப்பட்டது.

இயக்குநர் கே.பி.க்குப் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான்தான் ஹீரோ. இதைவிட எனக்கு ஒரு பெருமை வேண்டுமா.? அவருக்குப் பிடித்த நான் நடித்த மூன்று படங்கள் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அக்னி சாட்சி’, ‘சிந்து பைரவி’.

ஒரு காதல் கணவனும், மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும்விதமாக அவர் உருவாக்கிய படம்தான் ‘அக்னி சாட்சி’. அதைவிட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குநரும் இயக்கிவிட முடியுமா.?

vairamuthu-sivakumar-kani

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று பெண்கள் என்னை லவ் பண்ணுவாங்க. நான் அவங்க வீட்டு மாடில குடியிருப்பேன். அதுல ஒரு பொண்ணு.. என்னிடம் ஒரு லவ் லெட்டரை கொடுத்து போஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. உண்மையா அது எனக்கு எழுதப்பட்ட கடிதம். ஆனால் நான் அதை பிரித்துப் பார்க்கவே இல்லை.

sollathaan ninaikkeran-movie-stills-4

இப்படியே 25 நாள் ஓடிருச்சு. 25-வது நாள் அவங்க என்னைப் பார்க்க மாடிக்கு வருவாங்க. அப்போ நான் அந்தப் பொண்ணோட அக்காவின் புகைப்படத்தை வரைஞ்சுக்கிட்டிருப்பேன். அதைப் பார்த்தப் பின்னாடிதான் அந்தப் பொண்ணுக்கே நான் அவங்க அக்காவை லவ் பண்றது தெரிய வரும்.

அப்போ அவங்க கேப்பாங்க.. “25 நாளா நான் கடிதம் கொடுத்தனே.. அதில் ஒரு நாள்கூடவா அந்தக் கடிதத்தைப் பிரிச்சுப் படிக்கணும்னு உங்களுக்குத் தோணலை..?”ன்னு.. நானும் “அது உங்களோட பெர்சனல் கடிதமாச்சே.. நான் எப்படி படிக்க முடியும்..”ன்னு சொல்லுவேன்.

இந்தப் படத்தின் இறுதியில் அந்த மூன்று பெண்களையுமே நான் கல்யாணம் செஞ்சுக்க முடியாமல் போயிரும். அப்படியொரு டிவிஸ்ட்டான கிளைமாக்ஸை வைச்சிருந்தார் கே.பி.

‘சிந்து பைரவி’ படத்தில் ‘மோகம் என்னும் தீயில்’ பாடலை விசாகப்பட்டிணத்தில் படமெடுக்கப் போறோம்ன்னு சொல்லிட்டாங்க. நான் அந்தப் பாட்டை டேப் ரிக்கார்டர்ல பதிவு பண்ணிட்டு வந்து வீட்ல திருப்பித் திருப்பிக் கேட்டு மனப்பாடமே பண்ணிட்டேன்.

ஷூட்டிங்கிற்காக விசாகப்பட்டிணம் போயிட்டோம். ஆனால் அங்க போன பின்னாடிதான் தெரிஞ்சது பாட்டோட ஒலி நாடாவைக் கொண்டு வரலைன்னு.. அப்போ விசாகப்பட்டிணத்துக்கும், மெட்ராஸூக்கும் வாரத்துக்கு 2 நாள்தான் பிளைட் சர்வீஸ். உடனே போயி எடுத்திட்டும் வர முடியாத சூழல். அப்போ கே.பி. என்னிடம், “டேய்.. உனக்கு பாட்டு முழுசும் தெரியாமாடா”ன்னார்.. “தெரியும் ஸார்”ண்ணேன்.. அப்போ அங்க போய் உக்காரு.. பாடு.. நான் டப்பிங்ல பார்த்துக்குறேன்னாரு.

sindhubhairavi-2

விசாகப்பட்டணம் கடற்கரைல அலையெல்லாம் ஆள் உயரத்துக்கு வரும். அந்த அலைகளுக்கு மத்தியில போய் உக்காந்துக்கிட்டேன். போகும்போதே சொன்னேன். ஸார் நீங்க கர்ச்சீப்பை ஆட்டுங்க. நான் பாடுறேன் என்று சொன்னேன். சொன்னதுபோலவே அவர் கர்ச்சீப்பை ஆட்டினவுடனேயே மடமடவென பாடி முடிச்சேன்.

இப்படியொரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றியது என் திரைப்பட வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

வளரும் இயக்குநர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குநருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

ஒரே ஒரு இயக்குநர்.. ஒரே ஒரு சிகரம்.. அது கே.பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது…” என்றார்.

Our Score