ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘கோகுலம்’ கோபாலன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே’..!
இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநரான சஞ்சய் பாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
நடிகை ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகையான திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி இயக்குநர் சஞ்சய் கூறும்போது, “மிகத் திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது.
இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்தபோதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம்.
அதன்படி ரியாவுக்குப் பதிலாக பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கவுள்ளது” என்றார்.
திகங்கனாவை நாயகியாக தேர்வு செய்தது குறித்து சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ‘ஹிப்பி’ படத்தின் டிரைலரை பார்த்தேன். அதில் அவருடைய நடிப்பும், அழகும் என்னைக் கவர்ந்தது. இதனாலேயே அவரை நடிக்க வைக்கலாம் என்றெண்ணி போனில் தொடர்பு கொண்டு இந்தப் படத்தின் கதையைச் சொல்லி நடிக்கக் கேட்டேன். அவரும் ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். இந்த வாரம் முதல் திகங்கனா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்..” என்றார்.
இந்த ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் முற்றிலும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். ஹரீஷ் கல்யாணின் முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஜோதிடத்தின்படியே எடுக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.