full screen background image

“ரஜினி முருகன்’ பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த படமாக இருக்கும்..” – சிவகார்த்திகேயன் பேட்டி..!

“ரஜினி முருகன்’ பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த படமாக இருக்கும்..” – சிவகார்த்திகேயன் பேட்டி..!

வரும் வெள்ளிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். படத்தில் ராஜ்கிரண், சூரி, கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து ஹீரோ சிவகார்த்திகேயன் மிக நீண்ட பேட்டியளித்துள்ளார். அது இங்கே :

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை செய்து முடித்துக் காட்டி பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞன். எனது வாழ்வியலை சுவாரசியமாகவும், நகைச்சுவை உணர்வுகளுடன்  காட்சியமைத்து இருக்கிறார் இயக்குநர்.  என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

‘ரஜினி முருகன்’  என்று பெயர் வைத்ததற்கு காரணம் ஒரு திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான். இந்தப் பெயரை வைக்கலாம் என்று முதலில் யோசித்தபோதே மனதில் சிறிய அச்சம் ஏற்ப்பட்டது.

rajinimurugan-poster 

ஏனென்றால், நான் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன். அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்கு வைப்பது எனக்கும் பெருமையான விஷயம். ரஜினி ஸாரின் ரசிகர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ரஜினி ஸாரின் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் தற்போது அவர்களின் பெரும் அதரவுடன்தான் இந்தப் படம் வெளிவரப் போகிறது என்பதே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. அத்துடன் ரஜினி ஸாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருவன் என்பதால்தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இந்தப் படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும்விதமாக இருக்கும். எடுத்துக்காட்டாக வயதானவர்கள் விரும்பும்விதமாக குடும்பத்தின் வாழவியலை நகைச்சுவையுடனும், இளைஞர்களுக்கு ரசிக்கும் விதமாக காதல் காட்சிகளும், குழந்தைகள் விரும்பும் விதமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து ஒரு கதம்பமாக கொடுத்துள்ளோம்.

படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப  அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம்.

IMG_8773

இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை. இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது, ‘இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும்விதமாக இருக்க வேண்டும்’ என்றார். அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தில் நான் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்தப் படத்திலும் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை. அதனால் தவிர்த்திருக்கிறேன். அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது.

  IMG_9937

இதைத் தாண்டி மக்களின் நிலைப்பாடும் தற்போது தெளிவாக உள்ளது மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்துவிட்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். நகைச்சுவை கலந்து ஒரு திரைப்படம் கொடுக்க நினைக்கும்போது நாம் இது போன்ற கருத்துகளை ஆராய முடியாது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.  அந்த வகையில் இந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

இந்த பாடல்  திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது. அரபு ஷேக் ஒருவர் இந்தப் பாடலை பாடுவதை டிவியில் பார்த்தேன். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடல் படத்திற்கும் ஒரு அடையாளமாகவும் மாறியுள்ளது. அதற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாகத்தான் காட்சியமைத்து இருக்கிறோம். இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமான தருணத்தையும் நகைச்சுவையாக சொல்கிறது.

IMG_9566

ஆனால் நாங்கள் நினைத்ததை  சிறப்பாக கொடுப்பதற்கு ஏற்ப என்னுடன் சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியம்  மற்றும் படக் குழுவினர் சிறப்பாக உழைத்துள்ளனர்.  அதனால் கண்டிப்பாக இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். என்னை ஒரு கதாநாயகனாக வைத்து இயக்கிய இயக்குநர்களுக்குத்தான் நான் பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். நான் நினைத்துகூட பார்த்தது கிடையாது கதாநாயகனாக திரையில் வருவேன் என்று..!

இயக்குநர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் அதற்கு காரணம். இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார்  ‘எதிர் நீச்சல்’ படத்தில் கடைசி இருபது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர்  எழில் என்னை வைத்து முழு நீள நகைச்சுவை படத்தை எடுத்தார். இயக்குநர் பொன்ராம், சத்யராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க  வைத்திருந்தார். இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும்தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன். இவர்கள்தான் என் குரு.

நான் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் நடனம் கற்றுக் கொண்டேன். பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பைவிட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது. இதேபோல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன்.

கல்லூரி காலங்களில்தான் நான் மேடை ஏறியுள்ளேன்.  நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவருடன் ஒரு முறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒரு நாள் ‘நீ கண்டிப்பா கதாநாயகனாக வருவாய். அப்படி நடிக்கும்போது நான் அதில் வில்லனாக நடிப்பேன்’ என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன்.

‘ரஜினி முருகன்’ திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..” என்றார் ரஜினி முருகனான சிவகார்த்திகேயன்.

Our Score