சமீப காலமாக சிம்புவின் பேட்டி என்றாலே அதில் நிறைய அனுபவ முத்துக்கள் இடம் பெறுகின்றன. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி இது :
சினிமா நடிகர்களின் ரசிகர்களின் மோதல்கள் பற்றி..
“ரசிகர்கள் மத்தியில் இருக்கும் போட்டியும், மோதல்களும் இந்தக் காலத்திலும் குறையவில்லை. இப்போ இண்டர்நெட்டெல்லாம் வந்த பின்பு ரசிகர்களுக்கு இடையேயான மோதல் வெளிப்படையாகாதவே தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த மோதல்கள் ஆரோக்கியமானதல்ல.
எனக்கு ரஜினியையும், அஜீத்தையும் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக விஜய்யை வெறுக்கணும்னு நினைக்கிறது தப்பான விஷயம். எம்.ஜி.ஆரை பிடிக்குமென்றால் சிவாஜியை வெறுக்கணும்னு நினைக்கிறது அறியாமை. எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை ரசிகர்கள் தவறாகப் பேசக் கூடாது. உனக்குப் பிடித்தால் கை தட்டு, விசில் அடி.. பிடிக்கவில்லை என்றால் திட்டாதே..
தனுஷ் எனக்குப் போட்டியாளர்தான். ஆனால் அவருடைய பிறந்த நாள்.. அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன்.. அவர் சக நடிகர். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அதற்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும். ரசிகர்கள் இதையெல்லாம் புரிஞ்சுக்கணும். அதைவிட்டுட்டு இண்டர்நெட்டில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்குறது கேவலமான விஷயம்.”
காதல் தோல்விகள் பற்றி..
“முதல்முறை கத்திக் குத்து வாங்கினால்தான் வலிக்கும். உயிர் பேய்விடுமோ என்ற பயம் இருக்கும். ஏற்கெனவே குத்து வாங்கியாச்சு. இரண்டாவதாக வாங்கியது புதுசு கிடையாது. பழசுதான்.. அதுனால பெரிசா எடுத்துக்கலை. எதுவும் நம் கையில் கிடையாது.. கடவுள்தான் டைரக்டர். நான் நடிகன்தான்.. எனக்குக் காதலில் தோல்வி ஏற்பட வேண்டும் என்று தீர்மானிப்பது கடவுள். அவர் என்ன தீர்மானிக்கிறாரோ அது நடந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு நல்ல விஷயமாகூட இருக்கலாம்..”
‘இது நம்ம ஆளு’க்கு செம ரெஸ்பான்ஸாமே..?
“ஒரு கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் இருப்பதாகச் செய்தி பரவினாலே அவர்கள் நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு வந்துவிடும். அப்படித்தான் இந்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது…”
ஆக.. சிம்பு அடுத்தக் காதலுக்கு முயற்சி செய்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது..! இப்போதாவது அவரது காதல் முயற்சி ஜெயிக்கட்டும் என்று வாழ்த்துவோம்..!