இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்ஸிகா மோத்வானி நடிக்கும் ‘மீகாமன்’ திரைப்படத்தின் பிரஸ்மீட் நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
6 மணி என்று சொல்லி 7.45 மணிக்குத்தான் விழா துவங்கியது. ஆர்யா ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக இங்கே வந்ததால் லேட்டாகிவிட்டது என்றார்கள்.
முதல் ஆளாக தியேட்டருக்கு வந்த இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் காபி அருந்தும்போது அது அவரது சட்டையிலேயே கொட்டிவிட.. உடனடியாக வடபழனி பக்கம் சென்று வேறொரு புதிய சட்டையை வாங்கி அணிந்து கொண்டு கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்தார். ஏனோ ஹன்ஸிகா வரவில்லை..
டிரெயிலரை பார்த்தபோது ‘தடையறத் தாக்க’ கொடுத்த ஹிட்டில் அது போலவே இந்தப் படத்தையும் ஆக்சன், திரில்லர், கேங்ஸ்டர் கதையாக எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது..!
‘மீகாமன்’ என்றாலே ‘கப்பல் கேப்டன்’ என்று அர்த்தமாம்.. இந்த வார்த்தை தமிழ் வார்த்தைதான் என்கிறார் இயக்குநர். எந்த இலக்கியத்தில் இருந்து சுட்டார் என்பது தெரியவில்லை..!
ஆர்யா நடிக்கிறார் என்றாலே ஹீரோயின் யார் என்று கேட்பது பேஷனாகிவிட்டது. பின்புலங்களும் அவசியம் நமக்குத் தேவைதான். இதில் இதில் அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. ஆர்யாதான் ஹன்ஸிகாவை அழைத்து வந்திருப்பார் என்று நினைத்தால் “அது பொய்” என்றார் இயக்குநர். தயாரிப்பாளர் நேமிக்சந்த் ஜெபக்குதான் ஹன்ஸிகாவுக்கு தீவிரமாக ரெகமண்ட் செய்தாராம்.. “நல்லவேளை நான் தப்பித்தேன்…” என்றார் ஆர்யா.
ஆர்யா பேசும்போது ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரை ‘மோமோ சதீஷ்’ என்று குறிப்பிட்டார். இதற்கான விளக்கத்தை இயக்குநர் தன் பேச்சில் குறிப்பிட்டார். “லடாக்கில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அருகில் ராணுவத்தினரின் துப்பாக்குச் சூடு நடந்ததாம். அந்தச் சத்தம் கேட்டு இவர்கள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு காத்திருக்க.. இந்த நேரத்திலும் ‘மோமோ’வைத் தேடி சதீஷ்குமார் ஓடிவிட்டாராம்.. அதனால்தான் ‘மோமோ சதீஷ்” என்றார். ‘மோமோ’ என்பது காஷ்மீர் மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் ஒருவகை உணவாம். தெருவோரக் கடைகளிலேயே கிடைக்குமாம்..!
இந்தப் படத்தில் 3 பாடல்கள்.. ஒரு பாடல் கோரஸாகிவிட.. இன்னும் 2 பாடல்கள் ஹன்ஸிகா பாடுவதுபோலவாம்.. அதிலும் ஒரு பாடலை படமாக்கியபோது ஹன்ஸிகா அழுதே விட்டாராம்.. “ஸார்.. தமிழ்நாட்டுல எல்லாரும் என்னை குழந்தை மாதிரி பார்க்குறாங்க ஸார்.. அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நினைக்குறாங்க.. என்னைப் போய் இப்படி நடிக்கச் சொல்றீங்களே..?” என்று சிணுங்கினாராம்.. ஆனாலும் விடாப்பிடியாய் இயக்குநர் நடிக்க வைத்திருக்கிறார்..
“அப்படியென்ன செக்ஸியாக எடுத்திருக்கிறீர்களா?” என்றால்.. “இல்லை.. அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல காட்சிகளை அமைத்திருக்கிறேன்.. அவ்வளவுதான். ரொம்ப விரசம் இருக்காது…” என்றார் இயக்குநர்.
கூடவே அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் சூப்பர்.. “ஷூட்டிங்கிற்கு சென்னைக்குள் எங்கே வர வேண்டியிருந்தாலும் தன் வீட்டில் இருந்து சைக்கிளேலேயே வருவார் ஆர்யா. அப்படி கஷ்டப்பட்டுத்தான் தன் உடம்பை கச்சிதமா வைச்சிருக்காரு..” என்றார் இயக்குநர்.
வாவ்.. நடிகராக இருப்பதுக்கும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு..?