மிகப் பிரம்மாண்டமான படத்தில் இணையக் காத்திருக்கும் நடிகர் சிம்பு – இயக்குநர் ராம் கூட்டணி..!

மிகப் பிரம்மாண்டமான படத்தில் இணையக் காத்திருக்கும் நடிகர் சிம்பு – இயக்குநர் ராம் கூட்டணி..!

சிம்புவின் திடீர் மாற்றத்தினால் ஏற்பட்ட முதல் சந்தோஷத்தைப் பெற்றுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. போட்ட காசை எடுத்துவிட்ட திருப்தியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இருந்தாலும், சம்பளப் பணத்தில் பாக்கித் தொகை இன்னமும் செட்டில் செய்யப்படாததால் சிம்புவும் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்.

இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல் அடுத்தப் படமான ‘மாநாடு’ படத்தை முடித்துக் கொடுப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார் சிம்பு.

இன்னமும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் மொத்தப் படமும் முடிந்துவிடுமாம். ஏர்போர்ட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் முழுவதையும் எடுத்துவிட்டார்களாம். இப்போது செட் போட்டு எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கியிருக்கிறதாம்.

இதற்கிடையில் சிம்புவின் கேரியரை இன்னும் மேலே ஒரு படி தூக்கும்படியான ஒரு சம்பவம் நடக்கக் காத்திருக்கிறது என்று திரையுலகத்தில் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரபல இயக்குநரான ராம், சிம்புவுக்காக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறாராம். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக வேண்டிய படமாம். “இந்தப் படத்தில் மட்டும் சிம்பு நடித்துவிட்டால் அவரது இப்போதைய இருப்பு நிலையே மும்மடங்காகிவிடும்” என்கிறது இயக்குநர் தரப்பு. அதே சமயம், “இயக்குநர் ராமிற்கும் இந்தப் படம் கிடைத்து படம் வெளியானால் அவர் அகில இந்திய இயக்குநர்களில் ஒருவராக மாறிவிடுவார்…” என்கிறார்கள் அந்தக் கதையைப் பற்றித் தெரிந்தவர்கள்.

இப்போதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டை சிம்புவை நம்பி முதலீடாகப் போடப் போகும் தயாரிப்பாளரும், பைனான்சியரும் யார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது..!

நாமும் காத்திருப்போம்..!

Our Score