“படம் முடியறவரைக்கும் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது” – நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

“படம் முடியறவரைக்கும் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது” – நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

திருமண வாழ்க்கையில் யார் இணைந்தாலும் அவர்களை வாழ்த்துவதுதான் அகில உலக பண்பாடு. ஆனால் அதே நேரம் ஒரு நடிகை, லட்சணக்கணக்கான ரசிகர்களால் ஆராதிக்கப்படும் கனவுக் கன்னி.. திடீரென்று திருமணம் செய்து கொண்டு போனால், அவரை வைத்து எடுக்கப்படும் படத்திற்கு மதிப்பும், மரியாதையும், ரசிகர்களிடையே அவர் மீதான மாஸும் போய்விடும் என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களின் கணிப்பு.

இதனாலேயே நடிகை நயன்தாராவை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே “இந்தப் படம் முடியும்வரையிலும் நீங்கள் திருமணம் செய்யக் கூடாது…” என்று ஒரு தயாரிப்பாளர் நிபந்தனை விதித்திருக்கிறார். அந்தப் படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. அந்தத் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன்.

இவரது ‘விஷூவல் வென்ச்சர்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனத்தின் சார்பில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.

அந்த ஆண்டின் மிகச் சிறந்த வியாபார ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகவும், பல டிரெண்ட் செட்டர்களை உருவாக்கிய படமும் இதுவேயாகும். நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை நடிப்புக்கு மிக முக்கிய பங்களிப்பினை தந்தது இத்திரைப்படம்தான். இந்தப் படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை நயன்தாரா. அவர் இந்தப் படத்தில் இணைந்தது பற்றியும், படம் முடியும்வரையிலும் அவர் கல்யாணம் செய்யக் கூடாது என்று தான் விதித்த நிபந்தனைகள் பற்றியும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் இது குறித்துப் பேசும்போது, “இந்தப் படத்தைத் தயாரிக்கத் துவங்கியபோது நான் இரண்டு இயக்குநர்களிடத்தில் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தேன். அதில் ஒருவர்தான் எம்.ராஜேஷ். அவருடைய ‘சிவா மனசுல சக்தி’ படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தேன். இப்போதைய இளைஞர்களுக்கான கதையை கச்சிதமாக எழுதி இயக்கி வெற்றி பெற்றிருந்தார் எம்.ராஜேஷ். அதனால் அவரை வைத்து அடுத்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தேன்.

படத்தில் ஆர்யா நாயகன் என்று முடிவானவுடன் நாயகியைத் தேடினோம். அப்போது பாவனாவிடம் இந்தப் படத்திற்காக பேசியிருந்தோம். திடீரென்று ஆர்யாதான் நயன்தாராவை முன் மொழிந்தார். “நானும் அவங்ககிட்ட பேசினேன். அவங்க பெரிய சம்பளம் வாங்கினாலும்.. நமக்காக குறைக்கவும் தயாராத்தான் இருக்காங்க. நீங்க பேசிப் பாருங்க…” என்று என்னிடம் சொன்னார்.

நானும் நயன்தாராவிடம் சென்று பேசினேன். அப்போது நயன்தாராதான் தமிழ்ச் சினிமாவில் மிக அதிகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம், “இப்போ நீங்க வாங்குற சம்பளத்தை என்னால தர முடியாதும்மா.. அதுல பாதிதான் தர முடியும்..” என்று என் நிலைமையைச் சொன்னேன். கதையைக் கேட்டவுடன் அவருக்குப் பிடித்திருந்ததால் “சரி.. பரவாயில்லை. நான் பண்றேன்..” என்று சொல்லி பாதி சம்பளத்துக்கே ஒத்துக் கொண்டார்.

அதோடு நான் அந்தப் படத்துக்காக ஒப்பந்தம் தயார் செய்தபோது, அந்த ஒப்பந்தத்தில், “இந்தப் படம் முடியும்வரையிலும் நயன்தாரா திருமணம் செய்து கொள்ளக் கூடாது” என்ற ஒரு நிபந்தனையயும் சேர்த்திருந்தேன். இதைப் படித்துவிட்டு நிச்சயமாக அவர் கேள்வி கேட்பார் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அவர் அதைப் படித்தவுடன் சிரித்துவிட்டார். “இது எதுக்கு…?” என்றார். “இல்ல மேடம்.. நீங்க இப்போ ரசிகர்களோட கனவுக் கன்னியா இருக்கீங்க. படம் வெளியாகுறதுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டா ரசிகர்களிடையே கிரேஸ் குறைஞ்சிரும்.. அப்புறம் எனக்குச் சிக்கலாயிரும்”ன்னு சொன்னேன். “இட்ஸ் ஓகே. அதுவும் சரிதான்”னு சொல்லிட்டு மறுப்பு எதுவும் சொல்லாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன்.

Our Score