full screen background image

“விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்..” – சரத்குமார் எச்சரிக்கை..!

“விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்..” – சரத்குமார் எச்சரிக்கை..!

சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி நாசரை ‘போடா மயிறு’ என்று சொல்லியும், சங்கத்தின் துணைத் தலைவர் கே.என்.காளை சக நடிகர்கள் சிலரை ‘நாய்கள்’ என்று சொன்னதையும், இதற்காக இவர்கள் இருவரின் மீதும் சரத்குமாரிடம் நடிகர் விஷால் புகார் கூறியிருப்பதையும் இந்தப் பதிவில் சொல்லியிருந்தோம்.

இன்றைக்கு அதே திருச்சிக்கு தனது கட்சி கூட்டத்திற்காக வந்த நடிகர் சரத்குமார் நடிகர் சங்கம் பற்றியும், நடிகர் விஷால் பற்றியும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, “நடிகர் விஷால் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்..” என்று எச்சரித்திருக்கிறார்.

சரத்குமார் தன் பேட்டியின்போது, “தென்னிந்திய நடிகர் சங்கம் 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. நடிகர் சங்கம் இப்போதும் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது. சிலருக்கு பதவி மோகம் வரும்போது என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நான்கு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடன் இருந்தபோது சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் ஒரு மாத காலம் அலைந்து அதனை ஒரு கோடியே இருபத்தைந்து லட்சமாகக் குறைத்து, நடிகர்கள் பங்களிப்புடன் அதனை மீட்டெடுத்த பெருமை விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி ஆகியோரை சேரும். அப்போது நாங்கள் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் நடிகர் சங்க கட்டிடம் கடனில் அப்படியே மூழ்கி போயிருக்கும்.

அது மட்டுமன்றி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி நடிகர் சங்கத்தின் நிதி கையிருப்பை மூன்றரை கோடியாக உயர்த்தினோம். இந்த நிதியில் இருந்து நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

மீதி இருக்கும் நிதியின் மூலம் நடிகர் சங்கத்திற்கு நிரந்தர வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக திரைப்படத் துறையில் தொடர்புடைய சத்யம் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டுவதற்கு பொதுக்குழுவில் அனுமதி வழங்கினோம்.

இதில் நடிகர் சங்க நிதி 15 கோடி. சத்யம் நிறுவன நிதி 50 கோடியாகும். 29 வருடம் 11 மாதம் கழித்து இந்த கட்டிடத்தின் மதிப்பு ரூ.170 கோடியாக உயரும். நடிகர் சங்கத்திற்கு வருமானமாக மாதம் 24 லட்சம் வாடகை பணம் கிடைக்கும். நடிகர் சங்கத்தில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட யாரும் எடுத்துச் செல்ல முடியாது. எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் மாட்டோம்.

ஆனால் எங்கள் மீது விமர்சனம் செய்கிறார்கள். நான் வம்புக்கு செல்ல மாட்டேன். ஆனால் வம்பு செய்து சண்டைக்கு வந்தால் விடமாட்டேன்.

நடிகர் சங்கம் மீது பூச்சி முருகன் என்பவர் வழக்குகள் போட்டு இருக்கிறார். ஆனால் பொதுக்குழுவில் அவர் என்ன செய்தார்? என்பதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மீது வழக்குகள் போடும் பூச்சி முருகனைப் பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் நடிகர் விஷால், நடிகர் சங்கம் மீது தவறான தகவல்களை பரப்பி வருவது வேதனையை ஏற்படுத்துகிறது.

நடிகர் சங்கத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களை, செய்த வேலைகளை விளம்பரப்படுத்துவது இல்லை. ‘விஸ்வரூபம்’ படப் பிரச்சினையின்போது ஒரு நாள் இரவு முழுவதும் கமல்ஹாசனின் அருகில் இருந்து நானும், ராதாரவியும் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது விஷாலுக்குத் தெரியாதா..?

பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் கேள்வி கேட்க கூடாது. நடிகர் விஷால், தொடர்ந்து நடிகர் சங்கம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்தால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கொந்தளித்திருக்கிறார்.

ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்.. என்று பாராட்டுமளவுக்கு நடிகர் சங்கத்தில் உள்கட்சிப் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது.. நல்லது.. கலகம் பிறந்தால்தான் சில விஷயங்களுக்கு நியாயம் கிடைக்கும்..!

Our Score