full screen background image

“எந்திரன்’ திரைப்படம் காப்பியடிக்கப்பட்ட கதையில் உருவானது” – கமல்ஹாசன் சொல்கிறார்..!

“எந்திரன்’ திரைப்படம் காப்பியடிக்கப்பட்ட கதையில் உருவானது” – கமல்ஹாசன் சொல்கிறார்..!

எந்தப் பெரிய படமாக இருந்தாலும் ‘அது எந்தப் படத்தோட காப்பி’ன்னு கேக்குற அளவுக்கு ஒரே காப்பிய மயமாக இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இந்த நிலையில் இந்த ‘காப்பி கலாச்சாரத்திற்கு’ வக்காலத்து வாங்குவது போல ‘ஆனந்தவிகடனு’க்கு பேட்டியளித்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

”சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன்.

அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, ‘இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல… ‘டைம்’ பத்திரிகையும் ‘நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.

ஒரு விஷயம்… நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். ‘தினமணி கதிர்’ல ‘சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன். இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ங்கிற நாவலுக்கும் ‘சொர்க்கத் தீவு’க்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். ‘நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்’னு நான் சொல்லவும், ‘நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.

காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? ‘ஐ ரோபோ’ படம்தானே ‘எந்திரன்’. ஆனா, ‘ஐ-ரோபோ’ படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். ‘ஐ-ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது..? ‘எழுதின ராமாயணத்தைத்தானே நீ திரும்ப எழுதியிருக்கே…’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா?  ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா..? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா..?

சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கை வர்றவரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கைக்கு வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.

இன்னொரு விஷயம்… யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. ‘காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத் தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!”

”அப்போ, காப்பி அடிச்சாலும் யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாதுனு சொல்றீங்களா?”

”அது நம்ம ஆளுங்களோட சைக்காலஜி.  ‘நீ கெட்டிக்காரன் கிடையாது’னு அடுத்தவனைச் சொல்றதுல நம்ம ஆளுங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம். அவ்ளோ ஏன்… நான் கண்ணதாசனையே குறை சொல்லியிருக்கேனே..!

‘வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசிவரை பற்றித் தொடரும் பாவ புண்ணியம்’னு பட்டினத்தார் எப்பவோ எழுதிட்டார்.

அதுல கடைசி வரியில கண்ணதாசன் ‘கடைசி வரை யாரோ?’னு மாத்திட்டார்னு நான் சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு, ‘விடுய்யா… செட்டியார்க்கு, செட்டியார் காப்பி அடிச்சுக்கிறாங்க. என்னமோ பண்றாங்க’னு ஒருத்தர் சொன்னார்.

ஆனா, கண்ணதாசன் மட்டுமே தெரிஞ்ச எனக்கு, அவரைத் திட்டுறதுக்காக பட்டினத்தாரைத் தேடிப் படிச்சேன். அப்படி கண்ணதாசனைத் திட்டினது மூலமா ஒரு சித்தர் பாடல் எனக்கு அறிமுகம் ஆச்சு.

அது மாதிரி இப்ப ‘காப்பி’ன்னு திட்டுறவங்க, திட்டுறது மூலமா உலக சினிமாவைத் தெரிஞ்சுக்கிறாங்க. அப்போ என் ரசிகன் வளர்ந்துட்டு இருக்கான்னுதானே அர்த்தம். அது நல்ல விஷயம்தான்.  இப்படித்தான் வளர்ச்சி இருக்க முடியும். இவங்க எல்லாம் சினிமா ரசிகர்களா இருக்கிறவரைக்கும் கமல் வண்டி ஓடும். ஆனா, இவ்வளவு தெரிஞ்சவங்க நடிக்க வந்தா, என் மார்க்கெட் காலி. ‘அடுத்த ஆள் வந்தாச்சு’னு நான் மூட்டையைக் கட்டிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!”

அண்ணன் கமல்ஹாசன் சொல்றதை பார்த்தால் அவருடைய படங்களின் கதைகளை மற்ற மொழிகளில் காப்பியடித்து வெளியிட்டால்கூட எதுவும் சொல்ல மாட்டார் போலிருக்கிறதே..?

கம்பர் வால்மீகியின் ராமாயணத்தைத்தான் மொழி பெயர்த்தார். சொல்லித்தானே நடந்தது.. அதனால்தானே அது ‘கம்பராமாயணம்’ என்றே அழைக்கப்படுகிறது..? ஒரு சமாளிப்புக்கு இப்படி கம்பரையா இழுப்பது..?

‘தாகூரின் படைப்புகள் முழுவதும் காப்பி’ என்கிறார் கமல். எப்படி என்றுதான் புரியவில்லை. தாகூரின் சில கவிதைகள் பழங்காலத்திய உபநிடதங்கள் மற்றும் வேதங்களில் இருந்து உருவானவை என்று அவர் காலத்திலேயே வெளிப்படையாகச் சொல்லப்பட்டவைதான்.

கண்ணதாசன் தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலிலேயே பட்டினத்தாரின் முழு கதையையும் வெளியிட்டு அதில் இருந்து என்னென்ன பாடல்களை   தான் உருவாக்கினேன் என்பதை நேர்மையாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இங்கே சொல்லாததுதானே பிரச்சினை..? ஆமாம்.. ‘அதிலிருந்து இன்ஸ்பிரேஷன் செய்யப்பட்டதுதான்.. காப்பிதான்’ என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே.. யார் வேண்டாம் என்றது..?

“யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. ‘காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான்..” 

இப்படி பேசியிருப்பதுதான் ரொம்ப சிரிப்பா இருக்கு.. ‘நான் என்ன கொடுத்தாலும், எதைக் கொடுத்தாலும் மூலம் எது என்று யோசிக்காமல் ரசிக்க வேண்டும்’ என்கிறார் உலக நாயகன். அதாவது அவர் இன்னமும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்களாக மட்டுமே பார்க்க முயல்கிறார். ‘தான் கொடுப்பதை மட்டுமே ரசிக்க வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்’ எனப்து போல இருக்கிறது உலக நாயகனின் இந்த ஸ்டேட்மெண்ட்..!

தமிழ்ச் சினிமா ரசிகர்களை இன்னமும் குறைவாக எடை போட்டு வைத்திருக்கும் உலக நாயகனுக்கு நமது கண்டனங்கள்..!

Our Score