நடிகர் சங்கத்தில் இன்று எழுந்துள்ள பிரச்சினைக்கு மூல காரணமான நடிகர் பூச்சி முருகன் சங்கம் பற்றி இன்றைய ‘ஜூனியர் விகடனு’க்கு அளித்துள்ள பேட்டி இது :
‘‘நடிகர் சங்கத் தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் பதவியேற்ற பிறகு அது இந்த இருவரின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. அதுதான் அடிப்படை பிரச்னை.
அந்த நிலத்தில் சத்யம் சினிமாஸுக்கு லீஸுக்கு விட்டதை இவர்கள் இருவரும் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளனர். ஒப்பந்தம் எல்லாம் போட்ட பிறகுதான் எங்களுக்கு அதைத் தெரிவிக்கிறார்கள். இதுவரை அந்த ஒப்பந்தப் பத்திரத்தையும் எங்களிடம் வழங்கவில்லை. டெண்டர் கோராமல் எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?
பல மாவட்டங்களில் நாடக நடிகர்களுக்கு சங்கம் இருக்கின்றன. தேர்தல் சமயங்களில் இவர்களுக்கு தபால் ஓட்டும் உண்டு. ராதாரவியின் ஆட்களே அவர்களின் ஓட்டு்களைப் போட்டுவிடுவார்கள்.
நலிந்த நாடக கலைஞர்களுக்கு எல்லாம் இதுவரை ஓர் உதவிகூட செய்யாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார் ராதாரவி. சமீபத்தில் புதுக்கோட்டையில் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த விஷால், நாசர் ஆகியோரிடம் அவர்கள் இதையெல்லாம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
நஷ்டத்தில் இருந்த சங்கத்தை, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி கடனில் இருந்து மீள விஜயகாந்த் வழிசெய்தார். இவர்கள் இருவரும் தாங்கள் மட்டும் சம்பாதித்துக் கொண்டதோடு சங்கத்தையும் இழிவுபடுத்தி வருகிறார்கள்.
தேர்தலில் தோற்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயும் என்பதால் எப்படியாவது தங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்காது. நிச்சயமாக இவர்கள் இருவரும், இவர்களைச் சார்ந்தவர்களும் செய்த தவறுகளுக்கு பதில் சொல்ல வைப்போம்’’ என்றார்.
நன்றி : ஜூனியர்விகடன் – 24-05-2015