full screen background image

“இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்தியாவில் ராஜ உபசாரமா..?” – நடிகர் ராஜ்கிரணின் ஆவேசப் பேச்சு..!

“இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்தியாவில் ராஜ உபசாரமா..?” – நடிகர் ராஜ்கிரணின் ஆவேசப் பேச்சு..!

நேற்று மாலை நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம் தியேட்டரில் நடைபெற்ற ‘சிவப்பு’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியின் முடிவில் அந்தப் படத்தில் ‘கோனார்’ என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண் ஈழத் தமிழர்களின் நிலைமை பற்றி கோப ஆவேசமாகவும், உருக்கமாகவும் பேசினார்.

Sivappu-movie-poster

அவர் பேசும்போது, “ஈழத்தில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த மண்ணுக்காக போராடிய பல்லாயிரம் போராளிகள் கொல்லப்பட்டார்கள். இன்னும் உயிருடன் இருந்த போராளிகள் பிடித்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். இது எல்லாமே உலக நீதியை மீறிய இனப் படுகொலை.

அவர்களுடன் தர்மம் வாழ்ந்த இந்தியாவும் மேற்குலக நாடுகளுடன் கை கோர்த்து தமிழர்களை இன அழிப்பு செய்திருக்கிறார்கள். தட்டிக் கேட்க ஆளில்லை. இந்திய அரசு ஒட்டு மொத்த மீடியாவையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டு இலங்கையில் என்ன நடந்த்து என்பதே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இந்தப் படுகொலைகளைப் பற்றி சொல்லின. இந்தியா முழுமைக்கும் இது போய்ச் சேரவில்லை. சினிமா என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தின் மூலமாக இதைப் பற்றிச் சொல்லி நாம் அழக் கூட முடியாது.  அதற்கு இந்திய வெளியுறவுத் துறையின் கொள்கை அனுமதிக்காது.

அந்த இனப் படுகொலையை நீங்களே விசாரிக்கலாம் என்று அந்தத் திருட்டு நாய்களிடமே ஒப்படைத்துவிட்டார்கள். அவர்களே கொலை செய்து அவர்களே விசாரித்து தீர்ப்புச் சொல்லிக் கொள்வார்களாம். பாரத தேசமும் ஒத்துக் கொண்டு இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது இந்தியாவில் இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் மத்திய அரசுதான் ஆட்சி நடத்தி வருகிறது. இலங்கையில் இதுவரையிலும் 2000-க்கும் மேற்பட்ட கோவில்களை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கிவிட்டார்கள். அதை எதிர்த்து இந்த இந்துத்துவா ஆட்சியினர் குரல் கொடுக்கவில்லை.

பெளத்தம் என்றால் அன்பு. அந்த பெளத்தம் தெரியாத பெளத்தன் ராஜபக்சே சாமி கும்பிட திருப்பதி வருகிறான். என்ன தேசம் இது..? 2000 கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கிய அந்த ராஜபக்சேவுக்கு நமது இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குள் அனுமதித்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் நாம் சொல்ல முடியாது. படத்தில் வைக்க முடியாது. ஈழத்து மக்களின் வேதனையைச் சொல்ல முடியாது. இதைவிட அசிங்கம் என்னன்னா… ஏற்கெனவே எல்லாத்தையும் அழிச்சாச்சு. விடுதலைப் புலிகளை கொன்னாச்சு. பிரபாகரனையும் கொன்னாச்சு. ஆனாலும் இன்னும் 25 வருஷம் கழிச்சு பிரபாகரன் மாதிரி யாரும் தலையெடுத்துவிடக்கூடாது என்பதற்காக வாழ்வை இழந்து, வீடு, வாசல் இழந்து, ஒரு வேளை சோற்றுக்கூட வழியில்லாமல் இருக்கும் தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்து இனிமேல் அந்த மண்ணில் தமிழச்சிகளுக்குப் பிறக்கின்ற குழந்தைகளெல்லாம் தமிழர்களாக இருக்கவே கூடாது. சிங்களக் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு இனத்தையே அழிக்கிறார்கள்.

பிள்ளையும் பெத்தாச்சு. புருஷன் செத்தாச்சு. அப்பா, அம்மா செத்தாச்சி.. யாரும் இல்லை. வேறு வழியில்லை. அதனாலதான் விபச்சாரம் செய்கிறார் என் தமிழச்சி. இதையெல்லாம் இங்க காட்டவும் முடியாது.. சொல்லவும் முடியாது.  அதுனால இப்படியொரு கொடுமை இன்னும் ஒரு முறை நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கே ஈழம், ஈழத்துப் பெண், இலங்கை, பிரபாகரன், விடுதலைப்புலிகள்ன்னெல்லாம் சொல்லவே கூடாது. இருந்தால் சென்சாரில் அனுமதிக்க மாட்டாங்க. இதைவிட பெரிய கொடுமை என்னன்னா உலகம் முழுவதிலுமே அகதி மக்களுக்கும் சம உரிமை உண்டு என்று ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அதுல இலங்கையிலிருந்து வந்திருக்கும் அகதி மக்களையும் சேர்த்திருக்காங்கன்றதால இந்தியா அந்த ஒப்பந்தத்துல கையெழுத்து போடலை.

நேபாளம், பூடான், போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் இங்கே அகதிகளா பலரும் வந்திருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ராஜ வாழ்க்கை.. ராஜ உபச்சாரம்.. இதுல ஒரு விஷயம் என்னன்னா.. நேபாளம், பூடான்னுல்ல இருந்து வந்தவங்க.. மலைப் பிரதேசத்துல வாழ்ந்தவங்கன்றதால அவங்களுக்கு கஷ்டமா இருக்க வேண்டாமேன்றதுக்காக இந்தியால டார்ஜிலிங், கூர்க் போன்ற மலைப் பிரதேசங்கள்லேயே அவர்களை குடியமர்த்தி அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது இந்திய அரசு.

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டும் இங்கே வந்தால் அடக்குமுறை.. சிறை.. அவர்களுக்காக அகதிகள் முகாம் வைச்சிருக்காங்க. அதுலயும் சிறப்பு முகமான்னு ஒண்ணு சொல்றாங்க. செங்கல்பட்டு இன்னும் சில இடங்கள்ல சிறப்பு முகாம்ன்னு வைச்சு அவங்களைக் கொடுமைப்படுத்துறாங்க. இது யாரை திருப்திப்படுத்த.. எதை திருப்திபடுத்த.. அப்போ இந்தியால மனித நேயம் செத்துப் போச்சா..?

அங்க மாட்டுக் கறியை தின்னுட்டாருன்றதுக்காக ஒரு ஆளைக் கொல்றாங்க. ஆனா இங்க ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொன்னிருக்காங்க. இதைக் கேள்வி கேட்பாரே இல்லை. இதைச் சொல்ல முடியாதுங்கிறதால.. இதை ஞாபகப்படுத்தறதுக்காக தம்பி சத்யசிவா இந்த ‘சிவப்பு’ படத்தை எடுத்திருக்காரு.

உங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கிறது என்னன்னா… இந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்திருங்க. இலங்கை பிரச்சினை என்னன்னு தமிழ்நாட்டுல இருக்குற பொதுவான மக்களுக்கு இன்னமும் தெரியாது. அதுனால கெஞ்சி கேக்குறேன்.. படத்தை அவங்ககிட்ட கொண்டு போய்ச் சேர்த்திருங்க..” என்று கண் கலங்கி உருக்கமாகப் பேசினார்..!

Our Score