“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவேன்…” – நடிகர் ரஜினி சூளுரை..!

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவேன்…” – நடிகர் ரஜினி சூளுரை..!

2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிதாக கட்சியைத் துவக்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்துள்ள நிலையில், இன்று மதியம் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரஜினி.

அப்போது தமிழருவி மணியனும், பா.ஜ.கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருக்கும் அர்ஜூன் மூர்த்தியும் அவருடன் இருந்தனர்.

ரஜினி பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது, “ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமனம் செய்துள்ளேன். அதேபோல் என் நண்பர் அர்ஜூன் மூர்த்தியை நான் துவக்கவுள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளேன்.

என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன்.

2017 டிசம்பரிலேயே நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன்.  234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அப்போதே கூறியிருந்தேன். இதற்காக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், திடீரென்று ஏற்பட்ட கொரோனா லாக் டவுன் காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.

தற்போது நான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இந்தக் கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை.

தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன். தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை. அரசியல் மாற்றம் மிக, மிக முக்கியம், கட்டாயம் என்பதால்தான் இப்போது கட்சியைத் துவங்குகிறேன்.

எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.

ஜாதி, மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாகுவது நிச்சயம்.அற்புதம் அதிசயம் நிகழும்.

இது கொரோனா காலம் என்பதால் நோய்த் தொற்று அபாயம் இருப்பதால் தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்.

தேர்தலில் நான் வென்றால், அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும். தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வியாகத்தான் இருக்கும்…” என்றார்.

தமிழருவி மணியன் பேசும்போது, “வெறுப்பு அரசியலை புறந்தள்ளி ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுக்க உள்ளார். ரஜினி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அரசியல் களம் புகுந்துள்ளார். மருத்துவர்களின் எச்சரிக்கையும் மீறி ரஜினி மக்களுக்காக அரசியல் வேள்வியில் இறங்கியுள்ளார். ரஜினியின் இந்த அரசியல் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து உடன் பயணிப்பேன்..” என்றார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பேசும்போது, “மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜினி மக்கள் மன்றம் எப்போதும் தயாராகவே உள்ளது. எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி..” என்றார்.

Our Score