விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..!

விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..!

“உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதால் வெறுமனே நடிகராக மட்டுமே நின்று கொள்வார் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

கடைசி உதவி இயக்குநராகக்கூட அவர் வேலை செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் என் படங்களில் அந்த வேலையைப் பார்த்திருக்கிறார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

“பாரதிராஜா சொன்னது உண்மைதான்” என்கிறார்கள் ‘இயக்குநர் இமய’த்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இயக்குநர்கள் மனோபாலாவும், கே.ரங்கராஜூம்.

‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக இருந்த நால்வர் சித்ரா லட்சுமணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. கொஞ்சம்கூட ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால் மிகவும் களைத்துப் போன நிலைமையில் மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன் மூவரும் இருந்துள்ளனர்.

ஒரு நாள் இரவு ஷூட்டிங்கின்போது மனோபாலா கே.ரங்கராஜிடம் “என் வேலையையும் நீயே பார்த்துக்க.. கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு…” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கே.ரங்கராஜ், மணிவண்ணனிடம் இதையே சொல்லிவிட்டு அவரும் தூங்கப் போயிருக்கிறார். மணிவண்ணன் அடுத்து இருந்த கடைசி அஸிஸ்டெண்ட்டான சித்ரா லட்சுமணனிடம் “கொஞ்சம் நீ பார்த்துக்க” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

மிகுந்த களைப்பில் இருந்த இந்த மூவரும் ஒரே காருக்குள் தஞ்சம் புகுந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்போது விடிய விடிய நடந்த அந்த ஷூட்டிங்கின்போது நடிகர் கமல்ஹாசனே கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கிளாப் அடித்திருக்கிறார்.

விடியற்காலை பொழுதில் இந்த மூவர் கூட்டணி மெல்ல, மெல்ல ஸ்பாட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்றைக்கு நல்ல மூடில் இருந்ததால் திட்டு வாங்காமல் தப்பித்தார்களாம்..!

இது எல்லாவற்றையும்விட படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டே கிளாப்பும் அடித்து உதவியிருக்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு ஒரு ‘ஜே‘ போடலாம் என்றுதான் தோன்றுகிறது.

Our Score