“வரவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்…” என்று நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது ஆர்.கே.சுரேஷ் இதனை தெரிவித்தார்.
நிருபர்களிடத்தில் ஆர்.கே.சுரேஷ் இது பற்றிப் பேசும்போது, “நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள்தான் ஆகிறது. அதனால் இப்போது என்னால் சங்கப் பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.
ஆனால், மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். அதே சமயத்தில் நடிகர் உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு. விஷால் மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார்.
கடந்தத் தேர்தலில் விஷால் போட்டியிட்டபோது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை. அவருடைய மேனேஜர் முருகராஜ், விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலைதான். விஷால் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேர வேண்டிய உடனடியான உதவிகள் எதுவும் சேரவில்லையே…?
நான் எஸ்.வி.சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார்
என்றும் தெரியவில்லை. மிகப் பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை, ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கட்டும். அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை.
‘பில்லா பாண்டி’ பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் இடையில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக இல்லை. அதனால்தான் அந்தப் படம் ஓடவில்லை என்று விஷால் சொன்னதுதான் எனக்கு வருத்தமாகயிருந்தது. அவர் அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை…” என்றார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.