full screen background image

“விஜய் டிவில சிம்புவுடன் சண்டை போட்டது ச்சும்மா செட்டப்புதான்..” நடிகர் பிருத்விராஜ் வெளியிட்ட ரகசியம்..!

“விஜய் டிவில சிம்புவுடன் சண்டை போட்டது ச்சும்மா செட்டப்புதான்..” நடிகர் பிருத்விராஜ் வெளியிட்ட ரகசியம்..!

டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக சேனல்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை பத்திரிகைகள் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வந்தாலும், அதனை பொய்யாக்குவது போலவே தொடர்ந்து ரியலிட்டி ஷோக்களில் நட்சத்திரங்களின் மோதல்கள் வெடித்து வந்தன.

இதை அப்படியே உண்மையென்று நம்பிய அப்பாவி ரசிகர்களும் “இவங்க ரெண்டு பேர் சண்டைய பாருங்களேன்..” என்று விழி பிதுங்க சிரிப்போடு பார்த்து தங்களது பொன்னான நேரத்தை செலவழித்தனர்.

டி.ஆர்.பி. ரேட்டிங் என்கிற ஒரு விஷயத்துக்காகவே சில டிவி சேனல்கள் வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் இது போன்ற போலி டிராமாக்களை ரியலிட்டி ஷோக்களில்  செய்து வருகின்றன என்று  உண்மை தெரிந்த பலரும் சொன்னாலும் டிவி ரசிகர்கள் யாரும் அதை காது கொடுத்து கேட்பதில்லை.. ஆனால் இன்றைக்கு இது தொடர்பான உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றன.

7 வருடங்களுக்கு முன்பாக, 2007-ம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் சீசன் 1’ தொடரில் நடிகர் பப்லு என்னும் பிருத்விராஜும் கலந்து கொண்டு நடனமாடினார்.

அந்த ஷோவில் ஒரு நாள், போட்டியின் நடுவராக அமர்ந்திருந்த நடிகர் சிம்புவுக்கும், பிருத்விராஜுவுக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்து அது பெரிய அளவிலான வாதமாகி.. சிம்பு பட்டென்று “நான் இனிமேல் இங்கே வர மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்து அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

தமிழ்நாடே அடுத்த இரண்டு நாட்களுக்கு இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் “இது அனைத்துமே பக்கவாக பிளான் செய்து நடித்த நடிப்புதான். உண்மையில்லை” என்று அந்த மேடை நாடகத்தில் நடித்த நடிகர் பிருத்விராஜே இன்றைக்கு ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Prithviraj

பிருத்விராஜ் அளித்திருக்கும் அந்தப் பேட்டியில், “அந்தச் சண்டையை நாங்கள் முன்கூட்டியே திட்டம் போட்டுத்தான் அரங்கேற்றினோம். அது உண்மையான சண்டையில்லை.

அந்த எபிசோட் ஒளிபரப்பான இரவு, குறிப்பிட்ட அந்த டான்ஸ் புரோகிராமின் டி.ஆர்.பி. ரேட்டிங் ஓவர் நைட்டில் 27 பாயிண்ட்வரையிலும் உயர்ந்தது. சின்னத்திரை வரலாற்றிலேயே ஒரே நாளில் இவ்வளவு பாயிண்ட் உயர்ந்த ஒரே ஷோ, அந்த எபிசோடுதான்.

அதில் ஒரு சதவிகிதம்கூட உண்மையில்லை. சுற்றிலும் 13 கேமிராக்கள் இருக்கும்போது நடக்குற சண்டைல எப்படி உண்மையிருக்கும்…? முழுக்க முழுக்க பிளானிங் ஷோ அது. நாங்க சண்டை போடும்போது ‘ஸார் சண்டை போடாதீங்க’ன்னு செட்ல யாரும் சொல்ல மாட்டாங்க.. ‘சார் லைட் இருக்கு. அங்க நின்னு சண்டை போடுங்க.. மைக் சரியா வைச்சு சண்டை போடுங்க’ன்னுதான் சொல்வாங்க.. இதுல எங்க நிஜம் இருக்கும்..? நடிக்கன்னு வந்துட்டோம்.. மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?” என்று அப்போது நடந்த உண்மையை இப்போது ஏழாண்டுகள் கழித்து சொல்லியிருக்கிறார்.

ஒரு போலித்தனமான நாடகத்தை உண்மை என்று நம்ப வைத்து… மக்களை திரும்பத் திரும்ப அந்த ஷோவை பார்க்க வைத்து.. இதன் மூலம்  டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டு.. விளம்பர வருவாயையும் பெருக்கிக் கொண்ட விஜய் டிவி சேனலின் இந்தச் செயல் உண்மையில் நியாயம்தானா..?

இதற்கடுத்து இப்போதுவரையிலும் ஏதாவது ஷோவில் யாராவது ஒருவரை மோத வைத்து அதை பெரிதாக்கி.. மக்கள் கவனத்தைத் திசை திருப்பி தங்களது டி.ஆர்.பி.யை உயர்த்திக் கொண்டு காசு பார்ப்பதெல்லாம் வியாபார தந்திரமல்ல.. மக்களின் உணர்வுகளை ஏமாற்றும் செயல்..!

இனியாவது இவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ளட்டும்..!

அன்றைக்கு விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் நடந்த போலி சண்டை-மேடை நாடகத்தை இந்தக் காணொலியில் காணலாம்..!

Our Score