full screen background image

“சினிமால அப்டேட்டா இருக்கார் கவுண்டமணி..” – ஆச்சரியப்படும் நடிகர் பிருத்வி..!

“சினிமால அப்டேட்டா இருக்கார் கவுண்டமணி..” – ஆச்சரியப்படும் நடிகர் பிருத்வி..!

இயக்குநர் பாண்டியராஜனின் மகனான நடிகர் பிரித்வி ‘கை வந்த கலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது முதல் முறையாக ஒரு முக்கியமான கேரக்டர் ரோலில் ‘வாய்மை’ படத்தில் நடித்திருக்கிறார்.

அவருடன் ஒரு மினி பேட்டி..!

‘வாய்மை’ படத்துல உங்களுக்கு நடிக்க எப்படி வாய்ப்பு வந்தது..?

‘வாய்மை’ படத்துல என் நண்பன் சாந்தனு ஹிரோவாக நடிக்கிறான்னு கேள்விப்பட்டேன், அப்புறம் ஒரு நாள் பாக்யராஜ் சார் எனக்கு ஃபோன் செய்து “வாய்மை’ படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கு. நீ நடிக்கிறியா..?”ன்னு கேட்டார், நானும் சரின்னு சொல்லிட்டு இயக்குநர் செல்வகுமாரிடம் கதையை கேட்டேன். என்னுடைய கேரக்டரை வைத்துதான் இந்த படம் முழுவதும் நகர்கிறது என்று தெரிந்ததுமே இந்த படத்தை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்.

‘வாய்மை’ படத்தை பற்றி..?

‘வாய்மை’ படத்தை பற்றி டைரக்டர் பர்மிஷன் இல்லாம நான் இப்போ எதுவுமே சொல்ல முடியாது. இந்த படத்துல என்னோட கேரக்டர் பற்றி சொல்லனும்னா, படம் ஆரம்பிக்கும்போதே என்னோட கேரக்டரை வச்சுத்தான் ஆரம்பமாகும், படம் முடியும்வரை என்னோட கேரக்டரை மையப்படுத்தியே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இந்த படத்துல ஹைலைட்ன்னு பார்த்தா ரொம்ப நாள் கழிச்சு கவுண்டமணி சார் நடிச்சிருக்கார். மேலும் ராம்கி சார், தியாகராஜன் சார், ஊர்வசி மேடம், பூர்ணிமா அம்மா என பெரிய படையே இந்த படத்துல நடிச்சிருக்காங்க. முக்கியமான 10 கேரக்டர்களை வச்சுத்தான் இந்த ஸ்கிரிப்ட் டிராவல் ஆகுது. இதுக்குமேல படத்தை பற்றி சொல்ல முடியாது ப்ளீஸ்.

4 வருட இடைவெளி ஏன்..? இந்த இடைவெளிக்கு செலிபரெட்டி கிரிக்கெட்டுதான் காரணமா..?

வேணும்னே யாராவது சினிமாவுல கேப் விடுவாங்களா..? சரியான கதை, சரியான டீம் இதெல்லாம் பக்காவா அமைஞ்சாதானே நடிக்க முடியும்.. நிறைய வாய்ப்பு வந்தது. எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு நடிக்கிறதுல எனக்கு ஆர்வமில்லை, கதை, இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்தும் சரியாக இருக்கனும்னு ஆசைப்படுறேன் அவ்ளோதான்.

மற்றபடி என்னோட சினிமா கேரியருக்கும் சிசிஎல்க்கும் எந்த சம்பந்தமுமில்லை, அது வருஷத்து ஒரு மாதம்தான். எல்லா நடிகர்களும் ஒன்றாக இணையும் வாய்ப்பு கிடைக்குது. அது மட்டுமில்லாமல் சிசிஎல் எங்களுக்கு நிறைய புத்துணர்ச்சியை தருகிறது. பல நடிகர்களுடன் ஒன்றாக பழகும் வாய்ப்பு கிடைக்கும்போது மற்ற நடிகர்களிடம் சகஜமாக பழகிக் கொள்கிறோம்.. இது சினிமா துறைக்கு ஆரோக்கியம்தானே..?

உங்களின் கதை விவாதத்தில் பாண்டியராஜன் தலையிடுவாரா..?

நிச்சயமா கிடையாது.. என்னோட முதல் படத்தை தவிர இதுவரைக்கும் அவர் என் படத்தின் கதை சம்பந்தமா பேசியதே இல்லை, ஆனால் தயாரிப்பாளரை பற்றி கேட்பார். படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்யக் கூடிய பக்குவம் தயாரிப்பாளருக்கு இருக்கான்னு பார்க்கணும்பார். கஷ்டப்பட்டு நடிச்சிட்டு அந்த படம் ரிலீசாகாம போயிடக் கூடாதுன்னு கவனமா இருப்பார் அப்பா.

சிசிஎல் மூலமாக உங்களுக்கு ஏதாவது படவாய்ப்பு வந்திருக்கா?

சிசிஎல் மூலமாக எந்த பட வாய்ப்பும் வரல. ஆனா எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு. சிசிஎல் சீசன் நடக்கும்போது என்னிடம் நிறைய பேர் அடுத்த மேட்ச் பற்றிதான் கேட்பாங்க.. விஷால், ஜீவாவின் கேப்டன்சியில் சென்னை அணி நல்லா வளர்ந்துட்டு இருக்கு.. போன சிசிஎல் சீசன்ல விஷால் இல்லாதது எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அவர்கிட்ட அதிகமா திட்டு வாங்கினதும் நான்தான், அதிகமா பாராட்டு வாங்கினது நானாதான் இருப்பேன்.. அந்தளவுக்கு எல்லோரையும் விஷால் அண்ணா உற்சாகப்படுத்திட்டே இருப்பார். சிசிஎல்லில் நான் இருப்பதற்கு காரணமே விஷால் அவர்கள்தான். ஜீவாவின் கேப்டன்சியில் இந்த தடவை பைனல்வரைக்கும் வந்து கப்பை மிஸ் பண்ணிட்டோம், அடுத்த முறை கண்டிப்பா கோப்பையை கைப்பற்றுவோம்னு நம்பிக்கை இருக்கு.

இனிமேல் கேரக்டர் ரோலில் நடிப்பீர்களா..?

கண்டிப்பா நடிப்பேன், ஒரு கேரக்டர் படம் முடிஞ்சும் மக்களால் பேசப்படும்னா அதுல நடிக்க யாருதான் விரும்ப மாட்டாங்க..? 

கவுண்டமணி பற்றி..?

அய்யோ.. ஆமாங்க அவரை பற்றி சொல்லியே ஆகனும். ‘வாய்மை’ படத்துல கவுண்டமணி சாருடன் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இல்ல. ஆனா ஒரு நாள் அவரை மீட் பண்ற சான்ஸ் கிடைச்சுது.

ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நடிக்கும்போது நான் போயிருந்தேன், அப்போ அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் நடிச்சிட்டு ‘எங்ககிட்ட வந்து சரியா நடிச்சேன்னா, கண்ணோட லுக் சரியா இருந்துச்சா?’ன்னு கேட்டாரு, எனக்கு ஆச்சர்யமா போச்சு. இவ்ளோ பெரிய ஸ்டார்? எங்ககிட்ட வந்து இப்படி கரெக்‌ஷன்ஸ் கேட்குறாரேன்னு தோணுச்சு.

அதுமட்டுமில்லாம.. எல்லோரும் அவரை பழைய நடிகர்.. 40 வருஷமா நடிச்சிட்டு இருக்காரு.. அவருக்கு இப்ப இருக்குற சினிமா பற்றி தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கோம்.. அவர்கூட கொஞ்ச நேரம் பேசினாபோதும் அந்த எண்ணத்தை உடனே மாத்திப்பாங்க.. அந்தளவுக்கு சினிமாவுல அப்டேட்டா இருப்பார்.

ஹாலிவுட்டுல அறிமுகமாகிற ஹீரோ முதல் எந்த இயக்குநர் என்ன படம் எடுக்கிறார்..? அந்த படத்தோட டெக்னாலஜி என்ன..? என்று அனைத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கார். அவரை மிஞ்ச ஆளே இல்லைங்க.

இன்னைக்கும் ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு ஆர்வமா இருக்காரு. நான்தான் பெரிய ஆளுன்னு நினைக்கவே கூடாது.. அவரை மாதிரிதான் இருக்கனும்னு ஆசைப்படுறேன்.

அடுத்த படம்..?

அப்பா இயக்கத்தில் அடுத்த படத்துல நடிக்கிறேன், அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ஸ்கிரிப்ட் வேலைகளில் அப்பா பிசியா இருக்கார், படத்துக்கு இன்னும் பெயர் வைக்கல.. இப்போதைக்கு இந்த படத்துல நான் ஹீரோ.. அவ்ளோதான் எனக்கு தெரியும். கூடிய விரைவில் புதிய படத்தோட சந்திப்பு விழாவில் உங்களை மறுபடியும் சந்திக்கிறேன். 

Our Score