full screen background image

“நான் வெளிமாநிலத்துக்காரன்னு இப்பத்தான் தெரியுமா..?” – நடிகர் பிரகாஷ்ராஜின் கேள்வி..!

“நான் வெளிமாநிலத்துக்காரன்னு இப்பத்தான் தெரியுமா..?” – நடிகர் பிரகாஷ்ராஜின் கேள்வி..!

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பிரகாஷ் ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் எப்படி தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் நிற்கலாம் என்று தெலுங்கு நடிகர், நடிகைகளே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நடிகர் பிரகாஷ்ராஜ் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என்று அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்.

அத்தனை தென்னிந்திய ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்துவிட்டார். இது போன்ற சாதனையை வேறெந்த நடிகரும் செய்ததில்லை என்றே சொல்லலாம். நடிப்பிலும் குறையில்லாமல் சாதனை நடிப்பினை நிகழ்த்தியவர்.

தற்போது தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பிடிக்காமல் பல மூத்த தெலுங்கு நடிகர்களே அவருக்கு எதிராக பலரையும் தூண்டிவிட்டு பேச வைப்பதாக தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன.

இன்றைக்கு ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது அணி வேட்பாளர்களை பிரகாஷ் ராஜ் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இதே கேள்வியை அவரிடத்தில் கேட்டு அவரை டென்ஷனாக்கிவிட்டார்கள்.

பிரகாஷ்ராஜ் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நான் தெலுங்கில் நடிக்க வரும்போது யாரும் நான் வெளி மாநிலத்தவன் என்று சொல்லவில்லையே.. வெளிமாநிலத்தவன் என்றால் என்னை ஏன் இங்கே இத்தனை படங்களில் நடிக்க வைத்தார்கள். வைத்தீர்கள்..?

நான் இங்கே, ஆந்திராவிலேயே சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். எனக்கு இங்கேயே வீடும் உள்ளது. எனது ஆதார் கார்டும் இந்த ஆந்திரா முகவரியில்தான் உள்ளது. எனது பிள்ளை இங்கேதான் பள்ளியில் படிக்கிறான். நான் ஆந்திராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அப்போதெல்லாம் யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லை.

தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்  என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது..? 

‘அந்தப்புரம்’ என்ற தெலுங்கு படம்தானே எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தது. தெலுங்கு படங்களில் நடித்துத்தானே 9 நந்தி விருதுகளை வாங்கினேன்.

நான் உள்ளூர்க்காரனா, இல்லையா என்பதல்ல பிரச்னை.. சிலரது குறுகிய மனப்பான்மையும், குறுக்குப் புத்தியும்தான் காரணம்.  

30 ஆண்டு காலமாக நான் இந்த இண்டஸ்ட்ரியில் இருக்கிறேன். எனக்குப் பெயர், புகழ், பணம் எல்லாத்தையுமே இந்த இண்டஸ்ட்ரிதான் தந்தது. இதற்காக நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா..? அதனால்தான் இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.

ஆனால், இப்போது இந்தத் தேர்தலில் நிற்கப் போகிறேன் என்றவுடன் ஏன் இந்தக் கேள்வி..? எங்கேயிருந்து இந்தக் கேள்வி வருகிறது..? நான் தெலுங்கு திரையுலகத்தில் வாழ்கிறேன். தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அதனால் இந்தச் சங்கத்தில் போட்டியிடுகிறேன். என்னை யாரும் வெளி மாநிலத்தவனாக பார்க்கவும் கூடாது. முடியாது. நான் இந்தத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன்..” என்று ஆவேசமாகப் பேசினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

 
Our Score