இந்திரா காந்தியாக நடிக்கப் போகிறார் நடிகை கங்கனா ரணாவத்

இந்திரா காந்தியாக நடிக்கப் போகிறார் நடிகை கங்கனா ரணாவத்

ஜூன் 25, 1975. இந்த நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இன்றைக்குத்தான் அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளுக்குத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டது. நெருக்கடி நிலை அமலில் இருந்த 21 மாதங்களும் இந்தியாவே சிறையில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

அடுத்து வந்த பொதுத் தேர்தலில் “நான் நெருக்கடி நிலையை கொண்டு வந்தது மிகப் பெரிய தவறு. மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்…” என்று மன்னிப்பும் கேட்டார் இந்திரா காந்தி.

அந்த சோகத்தை நினைவூட்டும் நேற்றைய நாளில் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக்கப் போவதாகவும் அதில் தற்போதைய பரபரப்பு நாயகியான கங்கனா ரணாவத் இந்திரா காந்தியாக நடிக்கப் போவதாகவும், இந்தப் படத்தை கங்கனாவே இயக்கவும் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை கங்கனா ரனவத் ஏற்கெனவே ‘மணிகர்னிகா’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படத்தை முதலில் தெலுங்கு இயக்குநர் கிரிஷ்தான் இயக்கினார். பின்னர் கங்கனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கங்கனாவே மீதி படத்தை இயக்கினார்.

தற்போது மீண்டும் இயக்கத்தைக் கையில் எடுக்கிறார் கங்கனா. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இந்தப் படம் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்தை மையமாக கொண்டு இந்தப் படம் தயாராகிறதாம்.

இது குறித்து கங்கனாவிடம் கேட்டபோது, “கடந்த ஒரு வருடமாக இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி நடந்தது. அதில் நானும் கலந்துக் கொண்டேன். என்னைவிட யாரும் இந்த படத்தை சிறப்பாக இயக்கி விட முடியாது என்பதால் நானே இயக்க முடிவு செய்திருக்கிறேன்…” என்கிறார்.

தற்போது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளராகவே கருதப்படும் கங்கனா இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தால் அது இந்திராவின் பெருமையைக் குலைக்கும் வகையில்தான் இருக்கும் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் இப்போதே சலசலப்பு எழுந்துள்ளது.

Our Score