full screen background image

சினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை

சினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை

தமிழ் சினிமாவை தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது வரவினால் சினிமாவில் புதிய சகாப்தம் தொடங்கியது.

இவரது இளைய மகனான பிரபு தனது முதல் படமான ‘சங்கிலி’ படத்திலேயே தந்தை சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார்.. இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் இயக்க, தேவராஜ் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.

அந்த வகையில் இளைய திலகம் பிரபு திரைத்துறைக்கு வந்து இன்று, இந்த ‘பிலவ’ தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

முதல் படத்திலேயே அப்பாவான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பிரபு, தொடர்ந்து அவருடன் மட்டும் 19 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்துடன் ‘தர்மத்தின் தலைவன்’, ‘குரு சிஷ்யன்’, ‘குசேலன்’, ‘சந்திரமுகி’ படத்திலும், நடிகர் கமல்ஹாசனுடன் ‘வெற்றி விழா’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்திலும் பிரபு நடித்திருந்தார்.

நடிகர் திலகம் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இயக்குநர் பி.வாசு. இளைய திலகம் பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரபுவுடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிற நடிகைகள் ராதா, குஷ்பு.

இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரபு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இளைய திலகம் பிரபு ‘கலைமாமணி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

1992-ம் ஆண்டு வெளியான ‘சின்னத்தம்பி’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். மேலும் 2002-ம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் சிறப்பு விருதினையும் பெற்றிருக்கிறார்.

‘மனசுக்குள் மத்தாப்பு’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விருதினைப் பெற்றிருக்கிறார்.

7 முறை ‘பிலிம்பேர் அவார்டு’க்காக சிறந்த நடிகருக்கான போட்டிக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

ரஜினி, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ திரைப்படம் 824 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது. தென்னகத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய இப்படத்தை தயாரித்த பெருமைக்குரியவர் நடிகர் பிரபுதான்.

பிரபு இப்போதும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். கேரளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்துள்ள தேசிய விருது பெற்ற ‘மரைக்காயர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இது தவிர, மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்’, சாந்தனுவுடன் ‘ராவணக் கூட்டம்’, பிக்பாஸ் முகெனுடன் ‘வேலன்’ ஆகிய படங்களிலும் பிரபு நடித்து வருகிறார்.

இது தவிர கன்னடத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படத்திலும், தெலுங்கில் 3 படங்களிலும் மற்றும் மலையாளத்தில் 2 படங்களிலும் பிரபு நடித்து வருகிறார்.

தற்போது திரையுலகத்தில் நுழைந்து இன்றைக்கு 40-வது வருடத்தைக் கொண்டாடும் இளைய திலகம் பிரபுவை பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்..!

 
Our Score