நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய திரைப்படங்கள்.
இந்த இரண்டு படங்களின் முழு விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது.
பரபர திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தை ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் C.S.அமுதன் இயக்குகிறார்.
இந்தப் புதிய படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “Infiniti Film Ventures நிறுவனத்துடன் நான் மூன்றாவது முறையாக இணைவதை நினைத்தால், பெருமையாக உள்ளது.
Infiniti Film Ventures நிறுவன தயாரிப்பாளர்கள் தரம் மிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் C.S.அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்னபோது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ்ப் படங்களின் குறைபாடுகளை கிண்டலடிக்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அமுதன் மிகச் சிறந்த திரில்லர் இயக்குநராகக் கொண்டாடப்படுவார்…” என்றார்.
இயக்குநர் C.S.அமுதன் இந்தப் புதிய படம் பற்றிப் பேசும்போது, “நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான Infiniti Film Ventures நிறுவனத்துடன் இணைவது பெரும் மகிழ்ச்சி.
என்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளைத் தற்போது துவக்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.
இப்படத்தினை கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.P மற்றும் Infiniti Film Ventures நிறுவன பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.