‘அந்நியன்’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்ததையடுத்து அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் என் அனுமதியில்லாமல் அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியாது. கூடாது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுப்பேன்..” என்று ஷங்கரை எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தை ஹிந்தியில் நீங்கள் ரீமேக் செய்யவிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

‘அந்நியன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தப் படத்தின் கதையை அதன் எழுத்தாளரான சுஜாதாவிடமிருந்து முழுத் தொகையையும் கொடுத்து நான் பெற்றுள்ளேன் என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும்.
அதன்படி அந்தப் படத்தின் முழுக் கதைக்கும் உரிமையாளன் நான்தான். இந்த நிலையில் என் அனுமதி இல்லாமல் அந்தப் படத்தை ரீமேக் செய்வதோ, அந்தப் படத்தின் கதைக் கருவை மட்டும் எடுத்துக் கையாள்வதோ, கதையின் அடிப்படையில் புதிய படத்தை உருவாக்குவதோ சட்டப்படி குற்றம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். நீங்கள் ‘பாய்ஸ்’ என்ற படத்தை எடுத்து அந்தப் படம் ஓடாததாலும், உங்களுடைய பெயர் கெட்டுப் போனதாலும் மிகுந்த மனத் துயரத்தில் இருந்தீர்கள். அந்த நேரத்தில்தான் நான் உங்களுக்கு அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் மூலமாகத்தான் இழந்த பெயரை என்னுடைய உதவியினால் நீங்கள் மீட்டெடுத்தீர்கள். இது உங்களுக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கும் என்றே நம்புகிறேன்.
இதை ஏன் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்றால், இந்த நேரத்தில் இதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டு என்னிடம் சொல்லாமல் என்னுடைய தயாரிப்பில் வெளியான ஒரு படத்தை ரீமேக் செய்யப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறீர்கள் என்பதால்தான்..
தார்மீக ரீதியிலான உரிமைகளைப் பின்பற்ற நினைக்கும் நீங்கள் ஏன் இந்தச் சட்டத்துக்கு விரோதமான செயலைச் செய்யத் துணிந்தீர்கள்..
என்னுடைய அனுமதியில்லாமல் இந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியாது என்பதால் இந்தப் பட வேலைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து உங்களுக்கு என்னுடைய சட்டப் பூர்வமான வழக்கறிஞர் கடிதம் வந்து சேரும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.