நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தினமும் ஒரு டிவிஸ்ட்டை சந்தித்து வருகிறது.
இன்றைய டிவிஸ்ட்டு.. இத்தனை களேபரத்துக்கும் காரணமான நடிகர்கள் பூச்சி முருகனையும், குமரி முத்துவையும் மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி அறிவித்திருப்பதுதான்..!
பூச்சி முருகன் முதன்முதலில் நடிகர் சங்கத்தின் கட்டிட ஒப்பந்த விவகாரம் பற்றி நேரில் கேட்டு பதில் கிடைக்காமல், கடிதம் மூலம் கேட்டதினால்தான் இந்த நடிகர் சங்க விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது. இதனாலேயே இவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து இதே கேள்வியைக் கேட்டு கடிதம் எழுதிய நடிகர் குமரிமுத்துவையும் நீக்கினார்கள். கூடுதலாக பொதுக்குழுவில் இவர்களுக்கு ஆதரவாகப் பேசிய எம்.ஆர்.சுந்தரம், காஜா மொகைதீன் ஆகிய இருவரையும் நீக்கினார்கள்.
இவர்கள் நால்வரும் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்து வாதாடி வெற்றி பெற்று, வரும தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், இவர்கள் நால்வரும் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்படுவதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் ராதாரவி அறிவித்து இதற்கான அறிவிப்பாணையை சங்கங்களின் சார்பதிவாளர் கீதாவுக்கு அனுப்பியிருக்கிறார். சார்பதிவாளர் கீதாவும் இதனை ஏற்று இச்செய்தியை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்திருக்கிறாராம்..!
இது சமாதானத்துக்கான முதல் படியா..? அல்லது தப்பிக்க நினைக்கும் செயலா என்று தெரியவில்லை…!
பூச்சி முருகன் அண்ட் கோ-வின் பதிலை எதிர்பார்த்து மீடியாக்கள் காத்திருக்கின்றன.