full screen background image

பத்திரிகையாளர் இயக்கியிருக்கும் ‘ஜிப்பா ஜிமிக்கி’ திரைப்படம்

பத்திரிகையாளர் இயக்கியிருக்கும் ‘ஜிப்பா ஜிமிக்கி’ திரைப்படம்

“ஜிப்பா ஜிமிக்கி’ என்கிற டைட்டில் மக்களின் கவன ஈர்ப்புக்காக மட்டுமே வைக்கப்பட்டிருப்பதாகச்” சொல்கிறார் அப்படத்தின் இயக்குநர் ரா.ராஜசேகர்.

அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான ராஜசேகர், பல்வேறு பத்திரிகைளில் நிருபராகப் பணியாற்றி, கடைசியாக ‘மாலை முரசு’ பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். சினிமா ஆர்வத்தில் வேலையைவிட்டு கோடம்பாக்கத்தில் கால் வைத்தவர் தற்போது இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான் இந்த ‘ஜிப்பா ஜிமிக்கி’.

இந்தப் படத்தை 3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் பிரபல கன்னட தயாரிப்பாளர் ஜி.வி.திவாகர் தயாரித்திருக்கிறார். இவர் ஏன் தமிழில் வந்து படத்தை தயாரிக்கிறார் என்றால், படத்தின் ஹீரோவே இவரது மகன் கிரிஷ் திவாகர்தான்.

குஷ்பு பிரசாத் என்னும் வங்க மொழி தாரகை ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘தாயுமானவன்’ மதி, பாவா லட்சுமணன், போண்டா மணி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சரவண நடராஜன், இசை – ரனீப், எடிட்டர் – சுதா, பாடல்கள் – மோகன்ராஜன், கலை இயக்கம் – ஆர்.விஜயகுமார தொண்டைமான், சண்டை பயிற்சி – ராஜேஷ் கண்ணா, எழுத்து-இயக்கம் – ரா.ராஜசேகர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

துவக்கத்தில் திரையிட்ட டிரெயிலரிலும், பாடல் காட்சிகளிலும் மனதைக் கவர்ந்தது ஒளிப்பதிவுதான்.  அவ்வளவு அட்டகாசம்..!

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜசேகர் படத்தின் கதை பற்றி கொஞ்சம், கொஞ்சமாக சொன்னார். அதன்படி, “நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர், தங்களின் பிள்ளைகளை கல்யாண ஜோடியாக்கி தாங்கள் சம்பந்திகளாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் பிள்ளைகளுக்கு இது பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்தே இவருக்கு இவர்தான் என்று சொல்லி வைத்திருப்பதும் அவர்களுக்கே எரிச்சலைக் கொடுக்கிறது. தங்களது பெற்றோர்கள் சங்கடப்படாதவகையில் தாங்களே பிரிந்துவிடுவது என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

இதற்காக இருவரும் ஒரே ஊருக்கு தனித்தனியாக பயணம் செய்கிறார்கள். ஆனால் கடைசியில் இருவரும் சேர்ந்தே பயணிக்க வேண்டிய கட்டாயமும் வருகிறது. இந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள.. பயணம் வந்த நோக்கமே சிதறுண்டு,, இரண்டு மனங்களும் ஒன்றாகின்றன.. இதைத்தான் படத்தில் அழுத்தமாக, அழகாகச் சொல்லியிருக்கிறோம்..” என்றார் இயக்குநர்.

கர்நாடகாவின் கூர்க் பகுதியில் படத்தின் பெரும் பகுதியை படம் பிடித்திருக்கிறார்களாம். ஒளிப்பதிவாளருக்கு கொழுத்த வேட்டை கிடைத்திருக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பமும் கை கொடுக்க காட்சிக்கு காட்சி அழகு கொட்டுகிறது.

படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு ஒரு முக்கியமான வேடமாம். கன்னட ஆணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்து கர்நாடக கிராமத்தில் விவசாயத் தொழில் செய்யும் ஒரு விவசாயி கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறாராம்.

படத்தின் தலைப்பு பற்றி இயக்குநரிடம் கேள்வி கேட்டபோது, ”இதுவொரு கவன ஈர்ப்பா இருக்கணுமேன்னு வைச்சதுதான்.. ஜிப்பா என்பது ஆணின் குறியீடு. ஜிமிக்கி என்பது பெண்ணின் குறியீடு. ஆண், பெண் இருவரின் உணர்வுகளைப் பற்றிய கதை என்றாலும், படத்தின் டைட்டிலும் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதால்தான் ‘ஜிப்பா ஜிமிக்கி’ என்று பெயர் வைத்தோம்..” என்றார்.

Our Score