full screen background image

நடிகர் மயில்சாமியை பழி வாங்கிய குரங்குகள்..!

நடிகர் மயில்சாமியை பழி வாங்கிய குரங்குகள்..!

வாயில்லா ஜீவன்கள்தானே.. அதுகளைப் பத்தி பேசினால் யாருக்குத் தெரியப் போகுது..? எங்களை எப்படி அவதூறா பேசலாம்ன்னு அதுகளென்ன சண்டைக்கா வரப் போகுதுகன்னு நினைச்சு அண்ணன் நடிகர் மயில்சாமி ஒரு திரைப்பட விழாவில் நம்முடைய மூதாதையர்களான வானரப் படையினரைப் பற்றி பேசிய பேச்சு அவரை பல சிக்கல்களில் கொண்டு போய்விட்டுவிட்டது.

கடந்த மாதம் 26-ம் தேதி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘வஜ்ரம்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியும் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசும்போது, “குற்றாலத்தில் நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பை நடத்த விடாமல் சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலமாக மது அருந்தச் செய்து, அந்தக் குரங்குகளை மரம் ஏறுவதையே மறக்க செய்ததாக..” நகைச்சுவையுடன் கூறினார். மயில்சாமியின் இந்தப் பேச்சு மீடியாக்களில் குறிப்பாக இணையத்தளங்களில் உடனடியாக வெளிவந்தது.

இந்த செய்தியை படித்த சென்னை கால்நடை துயர் தடுப்பு கழக(எஸ்.பி.சி.ஏ.) அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மயில்சாமியின் பேச்சு, பிராணி வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகுமாம்.  இது தெரியாமல் மயில்சாமி பேசியதால் அவரை தொடர்பு கொண்டு இது பற்றி பேசியிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்.

actor mayilsamy

இது தொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் தலைமையில் முதன்மை ஆய்வாளர் தவுலத்கான், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் மயில்சாமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையின்போது நடிகர் மயில்சாமி அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் “ஒரு நகைச்சுவை நடிகன் என்ற முறையில், நகைச்சுவைக்காக.. பேச்சில் ஒரு ‘ஜனரஞ்சகம்’ இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் அந்த மேடையில் அப்படி பேசினேன். ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடக்கவே இல்லை.  

பிராணிகளையோ அல்லது பறவைகளையோ வதைப்பது எனக்கு உடன்பாடான ஒன்று அல்ல.. பிராணி வதை தடுப்பு சட்டப்படி நான் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை.

குரங்குகளுக்கு நகைச்சுவைக்காக மதுவை குடிக்க கொடுத்ததாக பேசியிருந்ததே பிராணி வகை தடுப்பு சட்டப்படி குற்றமாகும் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது.

இது எனக்கு மிகுந்த மன வேதனையும், வருத்ததையும் தருகிறது. எனவே நான் மேற்கண்டவாறு பேசியது தவறு என்று ஒப்புக் கொண்டு, அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து எஸ்.பி.சி.ஏ. அதிகாரி தி.தியாகராஜன் கூறுகையில், ‘‘குரங்குகளுக்கு மது ஊற்றியது தொடர்பான பேச்சு, நகைச்சுவைக்காக மட்டுமே பேசியதாக நடிகர் மயில்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இது போன்று விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை இனி நகைச்சுவைக்காகக்கூட பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்..” என்றார்.

நாட்டில் பிராணிகளுக்கு இத்தனை தூரம் பாதுகாப்பு இருக்கிறதா..? இறைச்சி கடைகளில் மக்கள் கண் முன்னாடியே கோழி, ஆடுகளை வெட்டிக் கொல்கிறார்களே.. இதையெல்லாம் தடுக்க மாட்டார்களா இந்த அதிகாரிகள்..? இளிச்சவாயன் அண்ணன் மயில்சாமிதான் போலும்..! பாவம்..

இதில் இன்னொரு விஷயம்.. இனிமேல் மயில்சாமி அண்ணன் பொது மேடைகளில் யாரைப் பற்றி, எதைப் பற்றி பேசினாலும் அது உண்மையில் நடந்ததா..? அல்லது ச்சும்மா காமெடிக்கு பேசுகிறாரா..? என்தையும் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்… அது பொய்யென்றால் அவர் பேச்சை கேட்கிற பார்வையாளர்களை அவமதிக்கிற செயலாகும்..  இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது..?

‘முன்னாடி போனால் கடிக்கும்; பின்னாடி வந்தால் உதைக்கும்’ என்பார்களே.. அது இதுதான்..!

Our Score